பெரும்பான்மை பலம் பெற்றால் பிரதமர் பதவியை ஏற்பேன்: ராகுல் காந்தி

rahul_gandhiAமக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றால், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வேன் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி அந்த மாநில கட்சித் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியினர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் மனம் திறந்து பதிலளித்ததாக கூறப்படுகிறது.

“ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, அதன் பின்னர் எம்.பி.க்கள் கூடி பிரதமராக என்னை தேர்ந்தெடுத்தால் பிரதமர் பதவியை ஏற்பேன்.

தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கை ஆண்டுக்கு 9 இல் இருந்து 12ஆக அதிகரிக்கப்பட்டது; தண்டனை பெற்ற எம்.பி.க்களைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது ஆகியவை எனது கோரிக்கையினால் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்று கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவை அனைத்தும் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டவை.

கூட்டணி தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத்துடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை’ என்று ராகுல் தெரிவித்தாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

TAGS: