சிறிது மாற்றங்கள் செய்யப்பட்ட தெலங்கானா மசோதாவுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மசோதாவில் ஹைதராபாதை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று சீமாந்திரா பகுதி அமைச்சர்கள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக பின்தங்கிய பகுதிகளாக கருதப்படும் ராயலசீமை மற்றும் வடக்கு கடலோர ஆந்திரப் பகுதிகளுக்கு சிறப்பு நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த இந்த மசோதாவை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் வரும் 12ஆம் தேதி மாநிலங்களவையில் தற்போதைய வடிவிலேயே தாக்கல் செய்யவும், அதன் மீது விவாதம் வரும் போது அதில் மேற்கொள்ள வேண்டிய 32 திருத்தங்களைக் கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ள இந்த மசோதாவில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதுபோல், ஹைதராபாத் நகரம் தெலங்கானவுக்கும், சீமாந்திராவுக்கும் குறிப்பிட்ட காலத்துக்கு பொதுவான தலைநகரமாக செயல்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் சரத் பவார், பிரிக்கப்படும் மாநிலங்களின் சட்டம் – ஒழுங்கு அதிகாரத்தை ஆளுநரிடம் வழங்குவது அரசியலமைப்பு சட்டத்தின்படி சரிதானா? என்றும் சீமாந்திராவின் தலைநகர் எப்போது அமையும்? என்றும் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டம் முடிவடைந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் பொதுச் செயலரும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பொறுப்பாளருமான திக்விஜய் சிங் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இந்த விவகாரதில் தற்போதைய நிலையை விளக்கினார்.
தெலங்கானா பிரச்னை தொடர்பான அமளியால் ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து மூன்று நாள்களாக முடங்கிப் போயுள்ளன. இந்நிலையில், வரும் 12ஆம் தேதி தெலங்கானா மசோதா தாக்கல் செய்யப்படுவதால் இந்த அமளி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னணி: தெலங்கானாவுக்கான மத்திய அமைச்சர்கள் குழு தயாரித்த தெலங்கானா வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் அனுமதியுடன் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது.
ஆனால், இந்த மசோதாவை ஆந்திர சட்டப்பேரவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரித்தது.
இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் மத்திய அமைச்சர்கள் குழுவை சீமாந்திரா பகுதிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சந்தித்து, “ஹை தராபாதை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்; அதன் வருவாயை சீமாந்திரா பகுதிக்கும் தெலங்கானாவுக்கும் சமமாக பிரித்து அளிக்க வேண்டும்; போலாவரம் நீர்ப் பாசனத்திட்டம் அமைந்துள்ள பத்ராசலம் பகுதி சீமாந்திராவிலேயே நீடிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கையை வியாழக்கிழமை கூடிய மத்திய அமைச்சர்கள் குழு விரிவாக விவாதித்து, தெலங்கானா மசோதாவில் இதற்கேற்ப சில நடைமுறை மாற்றங்களைச் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.