காங்கிரசுக்கு துணைபோக வேண்டாம்- ஆளுநருக்கு கெஜ்ரிவால் கடிதம்

aravaind_kejriwalபுதுடெல்லி: ஜன்லோக்பால் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நலனை பாதுகாக்க துணை போக வேண்டாம் என்று டெல்லி ஆளுநருக்கு முதல்வர் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜன்லோக்பால் வரைவு அறிக்கைக்கு கடந்த 3ம் தேதி டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து நிலையில் பதவி வகிப்போரும் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டணை வழங்கவும் மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. 13ம் தேதி இந்த மசோதாவை டெல்லி சட்ட மன்றத்தில் தாக்கல் செய்து 2 நாட்களுக்கு பின்னர் டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கில் நடத்தப்படும் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று ஆம் ஆத்மி அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் ஒப்புதல் பெறாத நிலையில் ஜன்லோக்பால் மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மசோதாவை முடக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு துணை போக வேண்டாம் என்று டெல்லி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடுமையான வார்த்தைகளால் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் நிர்பந்தத்திற்கு பணியப் போகிறீர்களா? இல்லையா? என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஆளுநரை கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் நஜீப் ஜங்கை சந்தித்து பேசிய காங்கிரஸ் தலைவர்கள் கெஜ்ரிவாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற விடமாட்டோம் என்று அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆம் ஆத்மி மற்றும் அந்த கட்சிக்கு ஆதரவளிக்கும் காங்கிரசுக்கும் இடையே மோதல் வலுக்கிறது.

TAGS: