தெலங்கானா உருவானால் காங்கிரஸ் அழிந்துவிடும்

kiran_kumar_reddyஆந்திரத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவினால் வெற்றி வாய்ப்பை இழந்து, காங்கிரஸ் அழிந்துவிடும் என்று மாநில முதல்வரான கிரண் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

தெலங்கானா தனி மாநில முடிவு, ஆந்திரத்தில் காங்கிரஸýக்கு நீண்ட காலத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தும். ஆந்திரத்தை இரண்டாகப் பிரிப்பதினால் ஏற்படும் பிரச்னைகளை பிரதமரும், சோனியா காந்தியும் புரிந்து கொள்ளவில்லை. மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் தீவிரமான தொண்டர்கள் ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறோம் என்று அவர்கள் உணரவில்லை.

தெலங்கானா தொடர்பாக, குடியரசுத் தலைவரின் பரிந்துரையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாங்கள் நிராகரித்தோம். ஆனால், காங்கிரஸின் பிற தலைவர்கள் அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரியது துரதிருஷ்டவசமானது. மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதைத் தடுக்க, எனது பதவியை ராஜிநாமா செய்வது உள்ளிட்ட எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளேன்.

தனிப்பட்ட நபரை விட கட்சி பெரியது; ஆனால், கட்சியை விட மக்களின் நலனே பெரியது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். மக்களின் விருப்பத்தையே நான் பிரதிபலிக்கிறேன்.

ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்தால் இரு பகுதிகளுக்கும் பயன் கிடைக்க வேண்டும். மாறாக, இரு பகுதி மக்களும் மின்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் கடும் பாதிப்பைச் சந்திப்பர். அவ்வாறு இருக்கையில் மாநிலத்தை ஏன் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கிரண் குமார் ரெட்டி தெரிவித்தார்.

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்து வேறு கட்சியைத் தொடங்குவது குறித்த கேள்விக்கு, “ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய நேரத்தில் முடிவெடுப்பேன்’ என்று கிரண் குமார் பதில் அளித்தார்.

TAGS: