ஜன லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் ராஜிநாமா!

aravaind_kejerwalதில்லி சட்டப்பேரவையில் ஜன லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் முதல்வர் பதவியைத் துறக்கவும் தயங்க மாட்டேன் என்று முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:

தில்லியில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற ஆதரவு அளித்தால் மட்டுமே காங்கிரஸ் ஆதரவை ஏற்றுக் கொண்டு ஆட்சியில் அமருவோம் என்று ஆம் ஆத்மி கட்சி ஏற்கெனவே தெளிவுபடுத்தியது. அதன்படியே இப்போது வரை எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தில்லி அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியவுடன் ஆதரவை மறுபரிசீலனை செய்ய காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த சலசலப்பைக் கண்டு நாங்கள் அஞ்சப் போவதில்லை. எங்கள் நோக்கமும் பாதையும் தெளிவாக உள்ளது.

கருத்து வேறுபாடு இல்லை: ஜன லோக்பால் மசோதா விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குடன் எனக்கு எவ்விதக் கருத்து வேறுபாடும் கிடையாது. அவர் சிறந்த மனிதர். தனிப்பட்ட முறையில் அவரை நான் மிகவும் மதிக்கிறேன். சிறந்த மக்கள் சிந்தனைவாதியான நஜீப் ஜங், காங்கிரஸ் நெருக்குதலுக்கு அடிபணியக் கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்.

“ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் அரசியலுக்கு வந்தோம். அதே எண்ணத்துடன்தான் ஜன லோக்பால் மசோதாவை தயாரித்தோம். ஆனால், அதை சட்டப்பேரவையில் நிறைவேற்ற எங்களிடம் தனிப் பெரும்பான்மை பலம் கிடையாது. ஊழலுக்கு எதிரான மசோதாவை ஆதரிக்க பாஜகவும், காங்கிரஸýம் தயங்குகின்றன. அச் சட்டம் அமலுக்கு வந்தால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் அஞ்சுகின்றனர். ஆகவே, ஜன லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் பதவியை ராஜிநாமா செய்யத் தயங்க மாட்டேன்’.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து சிந்திக்கவில்லை. ஆனால், போட்டியிட வேண்டும் என்ற அவசியம் எழுமானால் போட்டியிடுவேன்.

அரசியல் துறவறம்: “ஒரு நாளில் 24 மணி நேரம் மட்டுமே உள்ளது. தில்லியில் ஆம் ஆத்மி கட்சி சிறுபான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. ஆகவே, எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரம் மிகவும் குறைவு. அதனால், நாங்கள் சில நடவடிக்கைகளை மிக கவனமாகவும், அவசரமாகவும் எடுத்து வருகிறோம். அதைப் பற்றி எழும் அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எங்கள் நடவடிக்கையின் முடிவில் உண்மை என்ன என்பதை மக்கள் அறிவார்கள். எப்போது நம் நாட்டில் நல்ல கொள்கைகளும், திட்டங்களும் நிறைவேற்றப்படுவது சாத்தியமாகிறதோ அப்போது நான் அரசியல் துறவறம் மேற்கொள்வேன்’ என்றார் கேஜரிவால்.

TAGS: