அடுத்த 10 ஆண்டுகள் தலித்துகளுக்கானது: நரேந்திர மோடி

modiஅடுத்த 10 ஆண்டுகள் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கானதாக இருக்கும் என்று பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.

கேரள மாநிலம் கொச்சியில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்த விழாவில் மோடி பேசியதாவது:

நாட்டில் உள்ள அரசியல் நிகழ்வுகளை பரிசீலித்துப் பார்த்து, அடுத்த 10 ஆண்டுகள் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கானதாக இருக்கும் என்பதை நம்பிக்கையுடனும் அடக்கத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராட வேண்டும். குழந்தைகளுக்கு அதிகபட்ச கல்வியை வழங்க வேண்டும். இந்த இரண்டும் வளர்ச்சிக்கு முக்கியம். “கல்வி, ஒற்றுமை, போராட்டம்’ என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் இன்றைக்கு மிகவும் பொருந்துகின்றன. நீதியைப் பெறுவது என்பது கெஞ்சிக் கேட்பதல்ல, அது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாகும்.

நாட்டில் கடந்த 60 ஆண்டுகளில் செய்திருக்க வேண்டிய பல பணிகள் செய்யப்படவே இல்லை. அவற்றை நிறைவேற்ற வேண்டியது என் கடமை என்று கருதுகிறேன். அந்தப் பணிகளில் ஒன்றுதான், கேரள மாநிலத்தின் சமூக சீர்திருத்தவாதியான அய்யங்காளிக்கு நாடாளுமன்றத்தில் நினைவிடம் அமைப்பதாகும்.

காங்கிரஸ் கட்சி கடந்த 60 ஆண்டுகளாக பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. விஷ விதைகளை விதைத்து சமூகத்தைப் பிளவுபடுத்துவதன் மூலம் ஆதாயம் பெற காங்கிரஸ் முயற்சித்து வந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குரல் ஓங்கி ஒலிக்கும் நிலை ஏற்படும். இன்னும் 100 நாள்களில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதன் பின், பிரித்தாளும் முயற்சிக்கு முடிவு கட்டப்படும்.

தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு பி.ஆர்.அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பறிக்க சதி நடக்கிறது. இதன் ஒரு பகுதியாகவே, ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருமாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி கோரிக்கை வைத்துள்ளார்.

தாங்கள் நாட்டுக்காகவே அனைத்தையும் செய்வதாக ஒரு குடும்பம் (சோனியா குடும்பம்) கூறிக் கொள்கிறது. ஆனால், நாட்டு மக்களையே என் குடும்பமாக நான் நினைக்கிறேன். குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றதும் நான் என் குடும்பமான மக்களுக்கே அனைத்தையும் செய்தேன். நான் பிறந்த குடும்பத்துக்கு எதுவும் செய்து கொள்ளவில்லை என்றார் நரேந்திர மோடி.

தீண்டாமைக் கொடுமை: இவ்விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த கொச்சி நகர மேயரும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகருமான டோனி சம்மானி இதில் பங்கேற்கவில்லை. அவரது புறக்கணிப்பை மறைமுகமாகச் சுட்டிக் காட்டி மோடி பேசுகையில், “”நாட்டில் இன்னமும் பலர் என்னைத் தீண்டத்தகாதவனாகவே கருதுகின்றனர். நான் இன்னமும் தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்றார்.

TAGS: