வெளிநாடுகளி் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்க அதிரடிப்படை

modiபாஜக ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அந்தப் பணத்தில் 5 முதல் 10 சதவீதத் தொகை, முறையாக வரி செலுத்தி வருவோருக்கு வரிச் சலுகையாக அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 60 நகரங்களில் உள்ள ஆயிரம் இடங்களில், “தேநீருடன் ஒரு விவாதம்’ என்ற தலைப்பில், நரேந்திர மோடி காணொலிக் கட்சி மூலம் பொது மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

முதல்நாளன்று பொதுமக்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மோடி பதிலளித்தார்.

அப்போது, “பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணம் ஏழைகளுக்கு சொந்தமானது. ஆகையால், இந்த தேசவிரோத செயலை தொடர்வதற்கு அனுமதிக்க மாட்டேன்.

கருப்புப் பணத்தைக் கொண்டு வருவதற்காக சிறப்பு அதிரடிப்படை அமைத்து அதற்கு ஏற்ப சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதை செய்வதற்கு அரசியல் ரீதியாக தைரியம் தேவை. அதை பாஜகவால் மட்டுமே செய்ய முடியும். மீட்கப்படும் கருப்புப் பணத்தின் மூலம் முறையாக வரி செலுத்தி வரும் மாதாந்திர ஊதியதாரர்களுக்கு 5 முதல் 10 சதவீதம் தொகை வரிச் சலுகையாக பகிர்ந்து அளிக்கப்படும்’ என்றார் மோடி.

TAGS: