இலங்கை கடற்படையினரால் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் 29 பேர் சிறை பிடிப்பு

indian_fishermansமண்டபம் : கச்சத்தீவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றுமுன்தினம் இரவு சிறை பிடித்தனர்.ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் காலை விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். இரவு அவர்கள் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். அப்போது, அந்தோணி, சுப்பிரமணி ஆகியோருக்கு சொந்தமான படகுகள் உட்பட 7 விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர்.

இந்த படகுகளில் இருந்த ஜேசுராஜு, செந்தில், மணிமாறன் உள்ளிட்ட 29 மீனவர்களை சிறை பிடித்தனர். 7 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம்  இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, ராமேஸ்வரம், புதுக்கோட்டை, மண்டபத்தை சேர்ந்த 87 தமிழக மீனவர்களை நேற்று காலை ஊர்க்காவல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர்களின் சிறைக்காவலை பிப்.26 வரை நீட்டித்து ஊர்க்காவல்துறை நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 87 மீனவர்களும், மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

TAGS: