சுதந்திர இந்தியாவில் பெரும் ஊழல் புரிந்தது மன்மோகன் சிங் அரசுதான்: அத்வானி

advaniஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால அரசு பெரும் ஊழல் புரிந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சாடியுள்ளார்.

இது தொடர்பாக தனது வலைப்பூவில் அத்வானி மேலும் கூறியதாவது:

மிகவும் நேர்மையானவர் என்ற பெயருடன் ஆட்சியைத் தொடங்கியவர் மன்மோகன் சிங். ஆனால், சுதந்திர இந்தியாவில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான் பெரும் ஊழல் புரிந்துள்ளது என்ற அவப்பெயரை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அவர் பெற்றுள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை சிஏஜி வெளிக்கொண்டு வந்தது.

நாடாளுமன்றத்தின் மதிப்பை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சீர்குலைத்துள்ளது. பிரதமர் மற்றும் சோனியா காந்தியின் முன்னிலையில், பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தெலங்கானா விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மிளகாய்ப் பொடியை உறுப்பினர்கள் மீது தூவி, மிகவும் ஒழுங்கீனமற்ற முறையில் நடந்து கொண்டார். இதனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்பட பலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இது, 2-வது முறையாக ஆட்சி அமைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் “மிக மோசமான சாதனை’யாகும். அதேசமயம், முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், வாக்குக்கு பணம் அளித்த விவகாரத்தை வெளிப்படுத்தியதற்கு பாஜக எம்.பி.க்களுக்கு பரிசு அளிப்பதற்கு பதிலாக, அவர்களை சிறையில் தள்ளிய “பெருமை’ அரசுக்கு ஏற்பட்டது.

தற்போதைய அரசின் ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் தெலங்கானா விவகாரத்தால் தொடர் அமளி, ஒத்தி வைப்பு நடந்தது. ஆனால், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, நாடாளுமன்றத்தில் எவ்வித பிரச்னையுமின்றி 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

TAGS: