ராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து ! மரணக்கயிற்றில் இருந்து தப்பினர் !

vvபுதுடில்லி: ராஜிவ் கொலையாளிகள் 3 பேர் தங்களுக்குரிய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

கடந்த 1991ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் புலி ஆதரவு அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. தூக்கு தண்டனையை குறைக்க கூடாது என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர்.

இதற்கிடையில் மூன்று பேரும், கடந்த, 2000ல், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள், 11 ஆண்டு தாமதத்துக்கு பின், 2011ல், ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டன. தங்களின் கருணை மனுக்கள், தாமதமாக பரிசீலிக்கப்பட்டடு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சிறையில் கூடுதல் காலம் அனுபவித்து விட்டோம். சிறையில் எங்களின் மன நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே எங்களின் தூக்கு தண்டøனையை குறைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இவர்களின் தண்டனையை குறைக்க கூடாது என்றும், இந்த வழக்கு நடத்தும் சூழலுக்கு தமிழகம் ஏற்றதல்ல. இதனால் தமிழகத்தில் இல்லாமல் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் காங்., கட்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் இந்த கொலையாளிகள் மனுவை இனி சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் எனஅறிவித்தனர்.

இதன்படி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. குற்றவாளிகள் தரப்பில் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற குற்றவாளிகளை விடுவிப்பது முறையல்ல. இவர்கள் சிறையில் எவ்வித கவலையும் பட்டதில்லை என்றும் மத்திய அரசில் வாதிடப்பட்டது. மேலும் ஜனாதிபதி, ஆட்சி மாற்றம் காரணமாக இது போன்று தாமதம் ஏற்பட்டது. இதனை ஏற்று கொடூர குற்றவாளிகள் தண்டனையை குறைக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கருணை மனு மீதான அறிவிப்பு தாமதம் ஏற்று சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகளான மீசைமாதையன், பிலவேந்திரன், சைமன், உள்பட 15 பேர் தூக்கு ஆயுளாக குறைக்கப்பட்டது. இது போன்றே ராஜிவ் குற்றவாளிகள் தண்டனையையும் குறைக்கப்படும் என்று புலி ஆதரவு அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

ஆனால் ஒரு தேச பிரதமரை கொலை செய்த கொடூர குற்றவாளிகளுக்கு இந்திய சட்டப்படி பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தூக்கு வழங்கப்பட்டதை மறு பரிசீலனை செய்யக்கூடாது என்றும், விடுவித்தால் நாட்டில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும் , இது இந்திய நீதி மன்றங்கள் மீதான நம்பிக்கையை குலைத்து விடும் என்றும் தேச பற்றாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சாமானிய மக்கள் ஒரு கொடூரத்தினால் பாதிக்கப்பட்டால் அவனுக்கும், அவனை சார்ந்த குடும்பத்தினருக்கும் எப்படி நீதி கிடைக்கும் என்ற கேள்வி எழத்துவங்கியுள்ளது.

நல்ல உள்ளங்களுக்கு நன்றி: பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எனது மகனுக்காக நான் வீதி, வீதியாக அலைந்திருக்கிறேன். பல நாள் தீர்ப்புகளால் நான் ஏமாந்து போயிருக்கிறேன்.இந்த கொலைக்கும் எனது மகனுக்கும் சம்பந்தம் கிடையாது. நான் காலை முதல் இந்த தீர்ப்புக்காக பட, படப்புடன் காத்திருந்தேன், எந்த குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறான். இவனது தண்டனை குறைப்புக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அற்புதம் கூறினார்.

நிரபராதிகளை விடுதலை செய்யுங்கள்: வைகோ : இந்த தீர்ப்பு அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். எந்த குற்றமும் செய்யாத 3பேரும் பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க நாள். அளவு கடந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

TAGS: