முதல்வர், எம்.எல்.ஏ.,க்கள் இன்று ராஜினாமா : முழு கடையடைப்பு : பற்றி எரிகிறது ஆந்திரா

tgபுதுடில்லி : லோக்சபாவில் நேற்று தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இவருக்கு ஆதரவாக 50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். இதனால் ஆந்திராவில் அரசியல் களத்தில் மட்டுமின்றி, வீதிகளிலும் பதற்றம் நிலவுகிறது.

முதல்வர் ராஜினாமா : தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவிற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த கிரண்குமார், இன்று காலை 10.45 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். பின்னர் கவர்னரை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமா முடிவை கூற உள்ளார். கட்சி தலைமையோ அல்லது வேறு நெருக்கடியோ ஏற்படாத நிலையில் தானே முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ள கிரண்குமார், இன்று காலை 11.30 மணியளவில் அதிகாரப்பூர்வமாக தனது ராஜினாமாவை அறிவிக்க உள்ளார். இவருக்கு ஆதரவாக ஆந்திராவைச் சேர்ந்த 50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் கட்சியில் இருந்து விலக உள்ளனர். இத்தகவலை அம்மாநில சமூகநலத்துறை அமைச்சர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் சிரஞ்சீவியும் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறி வருகிறார்.

முழு கடையடைப்பு : ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மாநில தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இதனால் சீமந்திரா பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஜெகன்மோகன் கூறுகையில், இது நாட்டின் வரலாற்றில் கறுப்பு தினம்; இந்திய ஜனநாயகத்திலும் இது கறுப்பு தினம் என தெரிவித்துள்ளார். ஆந்திராவில் நடைபெறும் முழுகடையடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள், தமிழக-ஆந்திர எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

எம்.பி.,க்கள் கொண்டாட்டம் : தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா அறிவிப்புக்களும், கடையடைப்பு போராட்டங்கள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், தெலுங்கானா அமைக்க போராட்டம் நடத்தி வந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர்கள் அரசின் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர். ஆந்திர எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு பார்லி., செயல்பாடுகளை தொடர்ந்து முடக்கியதால் வேறு வழியின்றி காங்கிரசும், பா.ஜ.,வும் இறைந்து லோக்சபாவில் தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்ய ஒப்புதல் தெரிவித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத சீமந்திரா பகுதி எம்.பி.,க்கள், இது ஜனநாயகத்தை கொலை செய்யும் செயல் எனக் கூறி கூச்சலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக லோக்சபா டிவி நேரடி ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டது.

தலைவர்கள் கருத்து : லோக்சபா டிவியின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, இது எதிர்பாராதது; இத்தகைய நிகழ்வுகள் கடந்த காலத்திலும் நடந்துள்ளது; இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதாகும் என தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறுகையில், லோக்சபா நடவடிக்கைகளை மறைக்க முடியாது; டிவி ஒளிபரப்ப நிறுத்தப்பட்டாலும் அவையின் உள்ளிருந்த செய்திளார்கள் அதனை கவனித்து கொண்டு தான் இருந்தனர்; இது தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட ஒன்று என தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள பா.ஜ., எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், காங்கிரசார் கூறுவது போல் இது தொழில்நுட்ப பாதிப்பு அல்ல; திட்டமிடப்பட்ட சதி; இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்; இது அவை நடவடிக்கைகளுக்கு எதிரானது; எங்களது கவனத்திற்கு கொண்டு வரப்படாமலேயே இந்த சதி அரங்கேற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். தெலுங்கானா மசோதா குறித்த தனது பேச்சுக்களும் அவை பதிவில் இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

தெலுங்கானா மசோதாவில் கொண்டு வந்ததாக கூறப்பட்ட 62 திருத்தங்களில், 32 திருத்தங்கள் மட்டுமே நேற்றைய மசோதாவில் இடம் பெற்றிருந்தது. மற்ற திருத்தங்கள் மறைக்கப்பட்டுள்ளன. லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது லோக்சபாவிலும், ஆந்திராவிலும் பல்வேறு பதற்றங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று ராஜ்யசபாவில் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

TAGS: