மாநிலங்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் தெலங்கானா மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேறியது. இந்த மசோதா செவ்வாய்க்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறியதன் மூலம் நாட்டின் 29-வது புதிய மாநிலமாக தெலங்கானா உருவாகிறது.
மாநிலங்களவையில் தெலங்கானா மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஏற்பட்ட அமளியால் அவை பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டு திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டு, காகிதங்களை கிழித்து எறிந்ததால் மாநிலங்களவை போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சுற்றி கேடயமாக நின்றனர். அப்போது பேசிய மன்மோகன் சிங், “ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானாவைப் பிரித்து உருவாக்கப்படும் சீமாந்திரத்துக்கு 5 ஆண்டுகள் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். அதில், ராயலசீமா, வடக்கு கடலோர ஆந்திரப் பகுதி உள்பட 13 மாவட்டங்கள் அடங்கும். மத்தியப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் மாவட்டத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போல் சீமாந்திரப் பகுதிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பிரித்து உருவாக்கப்படும் தெலங்கானா, சீமாந்திரம் ஆகிய 2 மாநிலங்களின் பெருளாதார வளர்ச்சிக்கு வரிச் சலுகைகள் உள்பட 6 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்படும். போலாவரம் நீர் பாசனத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும். இந்த அறிவிப்புகளின் மூலம் பிரிக்கப்படும் தெலங்கானா மாநிலம் மட்டுமின்றி சீமாந்திரத்திலும் வளர்ச்சி ஏற்படும்’ என்று கூறினார். இருப்பினும் பிரதமரின் அறிவிப்பை பொருள்படுத்தாமல் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
முன்னதாக கடும் அமளிக்கு இடையே தெலங்கானா மசோதா மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசியதாவது:
பாஜக: “தெலங்கானா மசோதாவை பாஜக ஆதரிக்கிறது. ஆனால் அதேவேளை சீமாந்திரப்பகுதி மக்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்’ என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார். “சீமாந்திரப் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். சீமாந்திரத்துக்கு ரூ.1,000 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும்’ என்று வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.
சிரஞ்சீவி எதிர்ப்பு: மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி பேசுகையில், “தற்போதைய வடிவத்தில் தெலங்கானா மசோதாவை எதிர்க்கிறேன். தெலங்கானா மற்றும் சீமாந்திர மக்களின் நலனை கருத்தில் கொண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்’ என்றார். மத்திய அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரே எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்தார்.
பிஎஸ்பி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசுகையில், “தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதை எங்கள் கட்சி ஆதரிக்கிறது. இதேபோல் பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களும் சிறிய மாநிலங்களாக பிரிக்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.
சீதாராம் யெச்சூரி எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், “தெலங்கானா மாநிலத்தை எங்களது கட்சி எதிர்க்கிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக இணைந்து செயல்படுவது துரதிருஷ்டவசமானது’ என்றார்.
திமுக வெளிநடப்பு: தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய திமுக உறுப்பினர் கனிமொழி, அவையில் இருந்து தங்கள் கட்சி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.