தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். காங்கிரஸூடன் டிஆர்எஸ் கட்சி விரைவில் இணைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் சோனியா காந்தியை அவர் சந்தித்துப் பேசியிருப்பது அந்த எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளது.
தெலங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சத்தியநாராயணா, தெலங்கானா மாநிலம் அமைக்கப்பட்டால் டிஆர்எஸ் கட்சியை காங்கிரஸூடன் இணைக்கத் தயார் என்று சந்திரசேகர் ராவ் கூறியிருந்ததாகவும், தற்போது தெலங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டதால் டிஆர்எஸ் கட்சி தன்னுடன் இணைவதை காங்கிரஸ் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தில்லியில் சோனியா காந்தியை டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தெலங்கானா மாநிலத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக சோனியா காந்தியிடம் நன்றி தெரிவித்துக் கொண்டேன். அவருடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை’ என்று தெரிவித்தார்.
தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் சந்திரசேகர் ராவ், ஆரம்பத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். அந்த மாநில சட்டப்பேரவை துணைத் தலைவராக 2001 வரை இருந்த அவர், பின்னர் தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தி அக்கட்சியில் இருந்து விலகி டிஆர்எஸ் கட்சியைத் தொடங்கினார்.
2004 தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதலாவது ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தார். அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி, 2009 தேர்தலை தெலுங்கு தேசம் கட்சியுடன் சேர்ந்து எதிர்கொண்டார். அந்தத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அத்தேர்தலில், மக்களவையில் 2 தொகுதிகளிலும், மாநிலத்தில் 10 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது.