பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் சீனாவின் நிலைப்பாடு மாறும் : சீன ஆய்வில் தகவல்

BJP-logo_0பீஜிங் : இந்தியாவில் வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கு பின் பா.ஜ., மத்தியில் ஆட்சிக்கு வந்தால், சீனாவில் கொள்கை நிலைப்பாட்டில் நிச்சயம் மாற்றம் வரும் என சீனாவின் பெரும்பாலான சிந்தனையாளர்கள் கருதுவதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. சீனா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் நடத்திய ஆய்வில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்தில் ஆற்றிய பிரசார உரைக்கு பின் சீனா தனது நிலையில் இருந்து இறங்கி வரத் துவங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.

பிரதமருக்கு எதிர்ப்பு : பிப்ரவரி 22ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக் கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது, ”சர்வதேச நாடுகள் அனைத்தும், வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தும்போது, சீனா மட்டும், ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் செயல்படுவது சரியல்ல. இந்த எண்ணத்தை, சீனா, கைவிட வேண்டும். இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட, விட்டுத் தர மாட்டோம்,” என உறுதிபட எச்சரித்தார்.
இதற்கு முன் அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால் மோடி விஷயத்தில் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அதேசமயம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குறித்த சீன சிந்தனையாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ராகுலை இளம் துருக்கியர் என்றே அவர்கள் கருதுவதால், அது இந்திய-சீன உறவுக்கு உதவியாக இருக்கலாம் என கூறுகின்றனர். இது குறித்த சீன சிந்தனையாளர்கள் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் சீனாவிற்கு ஆதரவான துருக்கியர்கள் யாரும் இல்லாவிட்டாலும், அவர்கள் இந்தியாவின் சீன கொள்கை குறித்து தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

சீனாவின் பயம் : இந்தியாவின் மேற்கத்திய நாடுகளுடனான உறவு வளர்ச்சி அடைந்து வருவதாலும், அதை பயன்படுத்தி சீனாவிற்கு எதிரான தனக்கு பலத்தை இந்தியா பிரயோகிக்கலாம் எனவும் சீனா அஞ்சுவதாக அந்நாட்டு சிந்தனையாளர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை, இந்த ஆய்வின் போது தெரிவித்துள்ளனர். அமெரிக்கா உடனான இந்தியாவின் உறவு குறித்து சீனாவில் வெளியாகி உள்ள கட்டுரை ஒன்றில், எல்லை பிரச்னைகளை தீர்ப்பதற்காகவோ அல்லது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ சீனாவிற்கு எதிரான தனது பலத்தை உபயோகிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத் துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் ஒரு அரோக்கியமான போட்டி இருந்து வருவதால் பரஸ்பரம் இரு நாடுகளும் ஆதாயம் பெறுவதற்காக போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக இந்தியாவின் முன்னாள் தூதரும், வெளியுறவுத்துறை செயலாளருமான நிருபமா ராவ் கூறிய கருத்தே சீனாவின் இந்த பயத்திற்கு காரணம் எனவும் சீனா தெரிவித்துள்ளது.

இறங்கி வரும் சீனா : இந்திய ஆய்வாளர்களும், அரசியல்வாதிகளும், இந்தியாவின் நீண்டகால போட்டி நாடு எனவும், மிரட்டல் விடுக்கும் நாடு எனவும் சீனாவை கருதும் தங்களின் நிலையில் உறுதியாக இருந்து வருகின்றனர். பொருளாதார ஒப்பந்தம், ராணுவ படைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சீனாவிற்கு இந்தியா மிரட்டல் விடுக்கிறது. இத்தகைய செயல்பாடுகளின் இருநாடுகளின் உறவில் சில எதிர்பாராத பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது எனவும் சீன தெரிவித்துள்ளது.

இதனால் வரும் தேர்தலுக்கு பின் இந்தியா, சீனா உடனான தனது அடிப்படை கொள்கையை மாற்றிக் கொள்ளாது. இருப்பினும் இந்தியாவுடனான சீனாவின் கொள்கையிலும், நிலைப்பாட்டிலும் நிச்சயம் மாற்றம் இருக்கும் எனவும் சில குறிப்பிட்ட விவகாரங்களை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் கொண்டு வரப்படும் எனவும் சீன தெரிவித்துள்ளது.

TAGS: