சோனியா, ராகுல் மீது யோகாகுரு ராம்தேவ் கடும் தாக்கு

ramdevzகாந்திநகர், பிப்.25- யோகாகுரு பாபா ராம்தேவ் வெளிநாட்டு வம்சாவளி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

குஜராத் அரசு சார்பில் மகாத்மா மந்திரில் தேசிய ஆயுர்வேத மாநாடு நடைபெற்றது. இதில் பா.ஜ.க பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி, யோகாகுரு பாபா ராம்தேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய பாபா ராம்தேவ் “வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருக்கமாட்டார்கள். நாம் எல்லாவற்றையும் இறக்குமதி செய்துவிட்டோம். அதுபோலத்தான அவர்களின் சந்ததிகளையும்…” என்று விமர்சித்துள்ளார்.

“உள்நாட்டு பொருட்கள் சிறந்தவை. நாம் உள்நாட்டு பொருட்களையே ஆதரிக்க வேண்டும். எல்லோரும் நான் கூறியதை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்” என்று மறைமுகமாக சோனியாவைத் தாக்கியுள்ளார்.

மோடியின் தலைமைத்துவத்தை பாராட்டிய அவர் “2014-லிருந்து ராம ராஜ்யம் துவங்கும். நரேந்திர மோடிக்கும் ஆயுர்வேதத்திற்கும் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. மத்திய அரசு ஆயுர்வேதத்திற்கு எந்தவித ஆதரவையும் அளிப்பதில்லை. மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது மத்திய அலோபதி அமைச்சகமாக மாறிவிட்டது. பட்ஜெட்டில் 97 சதவீதம் அலோபதிக்கே ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 3 சதவீதத்திற்கு மட்டுமே மாற்று மருத்துவங்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

பல நோய்களை ஆயுர்வேதத்தின் மூலமாகவே குணமாக்க முடியும். ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதிப்படி கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவோம் என்று பேசினார்.

TAGS: