மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக 11 கட்சிகள் அடங்கிய புதிய அணி தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள், சமாஜவாதி, அதிமுக, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா உள்ளிட்ட 11 கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இக்கூட்டத்துக்குப் பின், கட்சிகள் இணைந்து வெளியிட்ட அறிவிப்பில், “ஆட்சியிலிருந்து காங்கிரûஸ அகற்றும் நேரம் வந்து விட்டது. அதேபோல், பாஜக மற்றும் வகுப்புவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதையும் தடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியதாவது:
நாட்டில் விலைவாசி உயர்வு, ஊழல்களுக்கு காங்கிரஸ்தான் காரணம். பாஜகவின் ஊழல்கள், காங்கிரஸின் ஊழல்களை விட மோசமானவை. வகுப்புவாத அரசியலை முன்னெடுத்துச் செல்லும் பாஜக, நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். காங்கிரஸýம், பாஜகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
இந்த இரு கட்சிகளையும் தேர்தலில் தோற்கடிக்க புதிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அணி முயற்சி வெற்றி பெற எங்களுடன் மதச்சார்பற்ற கட்சிகள் இணைய வேண்டும் என்று காரத் கூறினார்.
அப்போது, பிகார் முதல்வர் நிதீஷ் குமார், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவெ கெளடா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 272 தொகுதிகளில் காங்கிரஸ் அல்லது பாஜக வெற்றி பெறாவிட்டால் நீங்கள் ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு, “அதற்கு வாய்ப்பே இல்லை’ என்று நிதீஷ் குமார் பதில் அளித்தார்.
புதிய அணி குறித்து முலாயம் சிங் கூறுகையில், “11 கட்சிகள் கொண்ட புதிய அணி விரைவில் 15 கட்சிகள் அடங்கிய அணியாக உருவெடுக்கும்.
அதனால், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸின் ஆதரவு தேவையில்லை’ என்றார்.
முக்கியமான கட்டத்தில் காங்கிரûஸ நீங்கள் ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு, “காங்கிரûஸ மக்களவையில் பல முறை எதிர்த்துள்ளேன்’ என்று முலாயம் தெரிவித்தார். புதிய மாற்று அணியின் பிரதமர் பதவி வேட்பாளர் குறித்த கேள்விக்கு, “தேர்தலுக்குப் பின் அது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று பிரகாஷ் காரத்தும், முலாயம் சிங்கும் இணைந்து பதில் அளித்தனர்.
“மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், ஹெச்.டி. தேவெ கெளடா, ஐ.கே. குஜரால் ஆகியோர் தேர்தலுக்குப் பிறகு ஒருமனதாக பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டனர்’ என்று முலாயம் நினைவுகூர்ந்தார்.
என்சிபி வரவேற்பு: இதனிடையே, 11 கட்சிகள் அடங்கிய புதிய அணியை வரவேற்கிறோம் என்று தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.பி. திரிபாதி செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இடதுசாரிக் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த வகுப்புவாத எதிர்ப்பு மாநாட்டில் என்சிபி பங்கேற்றது.
ஆனால், புதிய அணியில் இணைவது குறித்து என்சிபி கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், புதிய அணியை என்சிபி வரவேற்றுள்ளதால், அக்கட்சியும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.