எங்களுக்கு வாய்ப்பளியுங்கள்; தவறு செய்திருந்தால் மன்னியுங்கள்: முஸ்லிம்களுக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

rajnath_singh“முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எப்போதாவது, எங்கேயாவது எங்கள் சார்பில் ஏதாவது தவறு நிகழ்ந்திருந்தால் அதற்கு தலை வணங்கி மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளோம்; இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள்’ என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முஸ்லிம் சமுதாயத்தினருடனான கலந்துரையாடலில் அவர் ஆற்றிய உரை:

குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தை நடத்த அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி உத்தரவிட்டதைப் போல் காங்கிரஸ் கட்சி தவறான பிரசாரத்தை செய்து வருகிறது.

இந்த விவகாரத்தில் மோடி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் அறிவித்த பிறகும் அதை காங்கிரஸ் கட்சி ஏற்கத் தயாராக இல்லை. வாக்கு வங்கி அரசியலுக்காகவே காங்கிரஸ் கட்சி மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறது.

பாஜகவில் இருந்து முஸ்லிம்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதை நம்ப வேண்டாம். முஸ்லிம் சமுதாயத்துக்கு பாஜக எதிரான கட்சி அல்ல. எங்களுக்கும் ஒரு வாய்ப்பளியுங்கள்.

மத்திய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமல்லாமல், சகோதரத்துவமும், மனிதநேயம் மேம்படவும், வலுவான இந்தியா அமைவதற்காகவும் முஸ்லிம் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எப்போதாவது, எங்கேயாவது எங்கள் சார்பில் தவறு நேர்ந்திருந்தால் அதற்கு தலை வணங்கி மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளோம். குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஏராளமான முஸ்லிம்கள் பாஜக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளனர் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

பாதுகாப்பான சமுதாயம்: முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, “இந்தியாவில் வகுப்புவாதக் கலவரங்கள் ஏற்படாமல் இருக்கவும், பாதுகாப்பான சமுதாயம் உருவாகவும், பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் முஸ்லிம் சமுதாயத்தினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்தத் தேர்தலில் 3-வது அணி 20 முதல் 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்றும் அருண் ஜேட்லி கூறினார்.

TAGS: