குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை “ஆண்மையற்றவர்’ என வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விமர்சித்துள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் புதன்கிழமை கூறுகையில், “”இதுபோன்ற வெட்கக்கேடான வார்த்தைகள் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரிடமிருந்து வருவது வருத்தத்துக்குரியது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அந்த வார்த்தையை அங்கீகரிக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தகாத வார்த்தைகளை பிரயோகித்ததற்காக சல்மான் குர்ஷித் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று கூறினார்.
பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், “”இது போன்ற மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளதன் மூலம் காங்கிரஸார் தோல்வி பயத்தில் இருப்பது நன்றாகப் புலப்படுகிறது.
காங்கிரûஸச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய்விடுவார்கள் என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரிந்திருக்கிறது.
அவர்கள் சற்று பொறுமை காக்க வைண்டும். ஊழல், செயல்திறனில்லாமை என அவர்கள் என்ன விதைக்கிறார்களோ, அதைத்தான் மக்களிடமிருந்து வட்டியுடன் அறுவடை செய்ய முடியும்.
அரசியலில் பண்பாட்டையும், நாகரிகத்தையும் காங்கிரஸ் இழந்து வருகிறது. அதன் தலைவர்கள் இந்தியக் கலாசாரம் குறித்து பேசுகிறார்கள். ஆனால் வெளிநாட்டில் படித்த குர்ஷித் நாட்டின் கலாசாரத்துக்கு சற்றும் பொருந்தாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்” என்று தெரிவித்தார்.
எது ஆண்மை?: பாஜக மூத்த தலைவர் சித்தார்த் நாத் இதுகுறித்து கூறுகையில், “”போர்க்களத்தில் யார் வீரத்துடன் போரிடுகிறாரோ அவர்தான் சிறந்த ஆண்மகன். போரிட மறுத்து ஓடி ஒளிபவர் அல்ல.
காங்கிரஸார் விரும்பினாலும் பிரதமர் பதவி வேட்பாளாராக களமிறங்க மறுக்கும் அவர்களது “இளவரசரை’ (ராகுல்) போலில்லாமல் பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளராக அனைவருக்கும் சவால் விடுத்து வரும் மோடியைப் பற்றி பேசுகிறோம் என்பதை சல்மான் குர்ஷித் சற்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்” என்று கூறினார்.
குர்ஷித்தை நீக்க வலியுறுத்தல்: பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே கூறுகையில்,”மோடியை தகாத வார்த்தையால் விமர்சனம் செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற விமர்சனத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. காங்கிரஸின் தேர்தல் பிரசாரம் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போய் விட்டது என்பதற்கு இதுவே உதாரணம்’ என்று கூறினார்.
முன்னதாக, சல்மான் குர்ஷித் “”குஜராத் கலவரத்தின்போது மோடி படுகொலைகளில் ஈடுபட்டார் என்று நான் குற்றம் சாட்டவில்லை. அவர் கலவரக்காரர்களைத் தடுக்க முடியாமல் ஆண்மையற்று இருந்தார் என்றுதான் சொல்கிறேன்” என்று செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.
நான் கூறியது சரியே
நரேந்திர மோடியை “ஆண்மையற்றவர்’ என்று தான் கூறியது சரியான வார்த்தைதான் என்று சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாஜகவினர் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து அவர் கூறியதாவது:
குஜராத் கலவரத்தை நரேந்திர மோடி கையாண்ட விதத்தைக் கண்டிக்க அதைவிட சிறந்த வார்த்தை ஏதாவது இருந்தால் பாஜகவினரே எனக்குத் தெரிவிக்கலாம்.
நான் அவரை உடல்ரீதியாக “ஆண்மையற்றவர்’ என்று கூறவில்லை. உடல்ரீதியாக அவர் ஆண்மையை பரிசோதித்து சொல்வது என் வேலையும் அல்ல. எதையும் செய்ய இயலாத ஒருவரைப் பார்த்து அரசியல்ரீதியாக சொல்லப்பட்ட வார்த்தைதான் அது.
மோடி வலிமையும் செயல்திறனும் மிக்கவர் என்றால் குஜராத் கலவரப் படுகொலைகளை வேண்டுமென்றே நடத்தியதாக அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கலவரத்தை தன்னால் தடுக்க இயலவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார் சல்மான் குர்ஷித்.