பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்தியா வல்லரசு நாடா?

rahul_gandhiபேருந்தில் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாதநிலையில், இந்தியாவை வல்லரசு நாடு என்று அழைப்பது எப்படி சரியாக இருக்கும்? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள டான் போஸ்கோ பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுடன் ராகுல் காந்தி புதன்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியவதாவது:

இந்தியா வல்லரசு நாடு என்று பெரிதாக அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. அதற்கு முன்பாக பேருந்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இளம்பெண்கள் பேருந்தில் செல்ல

அச்சப்படும்போது, நாம் இந்தியாவை வல்லரசு நாடு என்று எப்படி அழைக்க முடியும்?

நாட்டில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள். அவர்களைப் பார்த்து, பேருந்தில் செல்லும்போதும், சாலையில் நடந்து செல்லும்போதும் பாதுகாப்பை உணர்கிறீர்களா? என்று கேட்டால் ஒருவர் கூட ஆமாம் என்று சொல்லமாட்டார்கள்.

ஏதாவது ஒரு இடத்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்தால், அதைப்பற்றி பேசுகிறோம். இதேபோன்று பல இடங்களில் பலாத்காரம் செய்யப்படுவது பற்றி நாம் பேசுவதில்லை.

இந்த வேளையில் மாணவர்கள், நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். பெண்களை நீங்கள் மோசமாக நடத்தியிருந்தால், அது இன்றே கடைசி நாளாக இருக்கட்டும்.

ஆண்களைவிட பெண்களே திறமை வாய்ந்தவர்களாக, புத்திசாலிகளாக இருக்கிறார்கள். எனினும், அவர்களை தினந்தோறும் அவமானப்படுத்திவிட்டு இந்தியா வல்லரசாவது பற்றி பேசி வருகிறோம். நான் கோபமாக பேசுவதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், குடும்பத்தில் நான் அவ்வாறு வளர்க்கப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய தந்தை (ராஜீவ் காந்தி) என்னையும், என் சகோதரியையும் ஒரே மாதிரி நடத்தினார். என் பாட்டி இந்திரா காந்தி குடும்பத்தின் தலைவியாக இருந்து வழிநடத்தினார்.

அச்சத்தை போக்குவோம்: வடகிழக்கு மாநில மக்களின் திறமைகள் முறையாக பயன்படுத்தப்படாமல் போனதற்கு அந்த பகுதிகள் நாட்டின் பிற பகுதிகளுடன் குறைந்த அளவில் தொடர்பு வைத்திருந்ததே காரணம். அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன், தில்லியில் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் வடகிழக்கு மாநில மக்களின் நடமாட்டத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன.

வடகிழக்கு மாநில மக்களின் அச்சத்தைப் போக்கினால், அவர்களால் தங்கள் பகுதியில் வளர்ச்சியைக் காணமுடியும். மேலும் வடகிழக்கு மாநில மக்கள் கல்வியறிவு பெறுவதின் மூலமும் தங்கள் மாநிலங்களில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று ராகுல் காந்தி பேசினார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: வடகிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து மணிப்பூர் மாணவி ஒருவர் கேள்வியெழுப்பியபோது, அங்குள்ள மக்கள் அதிகாரமிக்கவர்களாக மாறும்போது, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று ராகுல் காந்தி பதிலளித்தார்.

TAGS: