மத்திய அரசை கண்டித்து பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம்: சத்தியமூர்த்திபவன் முன்பு பயங்கர மோதல்

naan

சென்னை: சத்தியமூர்த்தி பவன் முன்பு நேற்று நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கும், காங்கிரசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. பெட்ரோல் குண்டு, கற்கள் வீசப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை விரட்டியடித்தனர்.

இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதே சமயம், அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்த தமிழக அரசை கண்டித்து காங்கிரசாரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுசெல்வன் தலைமையில் நேற்று காலை சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட 60க்கும் மேற்பட்டோர் அண்ணாசாலை தர்கா அருகே திரண்டனர். திடீரென சோனியாகாந்தி உருவ பொம்மையை எரித்தனர்.

அவர்கள் வரும் தகவல் கேள்விப்பட்ட காங்கிரசார் 100க்கும் மேற்பட்டோர் பவனில் குவியத் தொடங்கினர். மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோ, மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எம்.குமார் ஆகியோர் தலைமையில் காங்கிரசார், போராட்டக்காரர்களை நோக்கி பாய்ந்து சென்றனர். அங்கு ஏற்கனவே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.  இருப்பினும் நாம் தமிழர் கட்சியினர் 4 பேர், அங்கிருந்த ஒரு சந்து வழியாக சத்தியமூர்த்திபவன் நோக்கி வந்தனர். அவர்களை காங்கிரசார் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, 4 பேரையும் பிடித்து அண்ணா சாலை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இது பற்றி அறிந்த நாம் தமிழர் கட்சியினர், அண்ணா சாலையில் ஒட்டப்பட்டிருந்த காங்கிரஸ் போஸ்டர்களை எல்லாம் கிழித்து எறிந்து தீ வைத்தனர்.  காங்கிரசார் கூட்டமாக திரண்டு சென்று கிழித்து எறியப்பட்ட போஸ்டர்களை பொதுமக்களுக்கு காட்டியவாறு ஜி.பி. ரோட்டில் ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை சத்தியமூர்த்தி பவனுக்குள் செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் சென்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதற்கிடையே, அண்ணா சாலையில் நாம் தமிழர் கட்சியினர் 200 பேர் திரண்டு காங்கிரசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அண்ணா சாலையில் உள்ள சமுதாய நல கூடத்தில் அடைத்து வைத்தனர். இதைத்தொடர்ந்து, யாரும் எதிர்பாராதவிதமாக தமிழர் முன்னேற்ற படை இயக்கத்தினர் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சத்தியமூர்த்தி பவனை நோக்கி முன்னேறினர். அவர்களை தடுப்பதற்காக போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளை எல்லாம் தூக்கி வீசி எறிந்தனர். போலீசார் அவர்களை தடுக்க எந்தவித முயற்சியும் எடுக்காமல் அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பவன் அருகே வந்ததும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு காங்கிரசாரும் உருட்டுக்கட்டை, செங்கல், கற்களை எடுத்துக் கொண்டு திடீரென எதிர் தாக்குதல் நடத்தினர். அப்பகுதியே போர்க்களம் போல் மாறியது.

அப்போது சிலர் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசினர். தெருவோரம் நின்றிருந்த சைக்கிள் ஒன்றின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். பொது மக்கள் பீதியில் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்பகுதியில் கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டது. திடீரென 500க்கும் மேற்பட்டோர் நேருக்கு நேர் மோதியதால், போலீசாரால் மோதலை கட்டுப்படுத்த முடியவில்லை. பாதுகாப்பு கவசம் அணியாமல் இருந்ததால் கல்வீச்சில் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக ஒதுங்கியே நின்றனர். இதனால் இரு தரப்பினர் வீசிய கற்கள் அவர்கள் மீதும் விழுந்தது. இதில், காங்கிரசார் மற்றும் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் என பலர் காயமடைந்தனர். சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிலர் மயங்கி கீழே விழுந்தனர். கலவரம் தொடர்ந்து நீடித்து கொண்டிருந்த நிலையில், அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பு கவசங்களுடன் முன்னேறி சென்று தடியடி நடத்தி இரு தரப்பினரையும் விரட்டியடித்து கலவரத்தை கட்டுப்படுத்தினர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு சாலையில் கற்கள், உருட்டுக்கட்டை, செங்கல்கள் சிதறி கிடக்கின்றன. கல்வீச்சு சம்பவத்தில் சில கடைகள் சேதமடைந்தது. காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்யாததால் அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்குதலுக்கு உள்ளானது. இப்போதும் போதிய முன்னேற்பாடுகளை போலீசார் செய்யாததே இந்த கலவரத்துக்கு காரணம் என காங்கிரசார் குற்றம்சாட்டினர்.

5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், புதிய தலைமை செயலகம் வழியாக கிண்டி நோக்கி செல்ல வேண்டுமானால் சத்தியமூர்த்திபவன் முன்பாக செல்லும் ஜி.பி.ரோடு வழியாகத் தான் செல்ல வேண்டும். இதனால் அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் எப்போதும் சென்று கொண்டிருக்கும். சத்தியமூர்த்திபவன் முன்பு நடந்த கலவரத்தால் காலை 11.20மணி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் நீண்ட நேரம் அப்படியே நிறுத்தப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். பின்னர் கலவரம் ஓரளவு கட்டுக்குள் வந்த பின்பு மாலை 4.45மணிக்கு போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டது. இதனால் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

காங்கிரசார் ஆவேசம்

காங்கிரசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சத்தியமூர்த்திபவன் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. காங்கிரசார் அங்கிருந்து கலைந்து செல்லாமல், சீமான் உருவ பொம்மைகளை எரிப்பது, போராட்டக்காரர்களுக்கு எதிராக கோஷமிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஜி.கே.வாசன், ஞானதேசிகன் அவர்களை சமாதானப்படுத்தியும் அவர்கள் தங்கள் வேகத்தை தொடர்ந்து காட்டிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அண்ணாசாலையில் சீமான் ஆதரவாளர்களுடன் வந்திருப்பதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரசார் மீண்டும் கம்பு, கட்டைகளுடன் அண்ணாசாலை நோக்கி கிளம்பினர். பின்னர் அது வதந்தி என தெரியவந்தது. ஞானதேசிகன் அவர்களை சமாதானப்படுத்தி பவனுக்குள் அழைத்து சென்றார்.

ஹெல்மெட்டுடன் களத்தில் குதித்த கராத்தே

இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் போது 3 மாவட்ட தலைவர்களும் சம்பவ இடத்தில் இருந்தனர். அப்போது எதிர்தரப்பினர் தொடர்ந்து கல்வீசிக் கொண்டே சத்தியமூர்த்திபனுக்குள் நுழைய முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரசாரும் எதிர் தாக்குதல் நடத்தினர். அப்போது தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் ஹெல்மெட் அணிந்து கொண்டு, அவரும் போராட்டக்காரர்களை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்.

TAGS: