புதிய வர்த்தக யுக்திகள் வேண்டும்: நரேந்திர மோடி

narendra_modiஇந்திய வர்த்தகர்கள் தமது வர்த்தகக் கொள்கையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அனைத்து இந்திய வர்த்தகர்கள் அமைப்பின் இரண்டு நாள் தேசிய மாநாட்டில் முதல் நாளான வியாழனன்று அதில் கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி, இந்திய வர்த்தகர்கள் புதிய வியாபார யுத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

உலகளாவிய சவால்கள் அனைத்தையும் வாய்ப்புகளாக மாற்றும் சக்தியைப் பெற புதிய தொழில்நுட்பம் உதவி செய்யும் என்றும், ஆகையால் வணிகர்கள் தங்களது தொழிலில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த தயங்கக்கூடாது எனவும் அவர் பேசினார்.

காலமாற்றத்திற்கு தேவையான மாற்றங்களை உணர்ந்து செயல்படவேண்டிய முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், வணிகர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே உலக அளவில் வணிகத்தை பெருக்கி கொள்ளும் வாய்ப்பு தற்போது பெருகியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் இளைஞர்கள் கணினி மென்பொருள் துறையில் உலகளாவிய சாதனை புரிந்து அவற்றை உலகம் முழுக்க பரப்பியுள்ளதாக கூறிய அவர், அவற்றை வர்த்தக துறையினரும் தங்களது வியாபார யுத்திகளுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

வர்த்தகக் கொள்கை மற்றும் காப்புரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை குறிப்பிட்ட நரேந்திர மோடி, விவசாயிகளும், உற்பத்தியாளர்களும், வணிகர்களும் ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் செயல்பட வேண்டியதும் அவசியம் என்றார்.

இணைய வர்த்தக நிறுவனங்கள் குறித்து குறிப்பிட்ட மோடி அவற்றை கண்டு இந்திய வணிகர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், அவற்றின் வளர்ச்சி இந்திய வணிகர்களின் தொழில் வளர்ச்சிக்கும், வணிகப் பெருக்கத்திற்கும் பெரிதும் பயனளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வணிகர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாம் எப்போதும் ஆதரவு அளிப்பேன் என்றும் நரேந்திர மோடி அப்போது உறுதியளித்தார்.

முன்னதாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, வணிகர்களுக்கு மிகவும் அவசியமான சட்டத்திருத்தங்கள் அனைத்துக்கும் அக்கட்சி ஆதரவு அளிக்கும் என வாக்குறுதி அளித்தார்.

தமிழக வணிகர் சங்கத் தலைவர் கருத்து

இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள தமிழக வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா மோடி ம்ற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் உரை குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவித்தார்.

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு ரத்து செய்யப்படும் என்ற வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்பதாக முரளி மனோகர் ஜோஷி வாக்குறுதி அளித்ததாக விக்கிரமராஜா குறிப்பிட்டார்.

உணவுப் பாதுகாப்பு சட்டம் மறு ஆய்வுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொள்வதாக ஜோஷி குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

இணைய வழி வர்த்தகம் நிறுத்தப்பட வேண்டும் என்ற தமது கோரிக்கையை பாரதீய ஜனதா முழுமையாக ஏற்றுக்கொள்வதாக மோடியின் கருத்து அமையவில்லை என தமிழக வணிகர் சங்க தலைவர் கூறினார். -BBC

TAGS: