நளினி உள்பட நால்வரின் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை

rajiv_killers1aமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஜெயகுமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 4 பேரையும் விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடைவிதித்தது.

இந்த வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட 4 பேரை விடுவிக்கக்கூடாது என்று மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. மத்திய அரசின் இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி முன் வைத்த வாதம்:

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு ஏற்கெனவே தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந் நிலையில் இதே வழக்கு தொடர்பாக மத்திய அரசு ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது என்பதால் இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல.

நளினி உள்பட 4 பேரை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவில் மத்திய அரசு தலையிட முடியாது. ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அதற்கு பதிலளிக்காமல் மத்திய அரசு அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் மத்திய அரசு அவசரம் காட்டுகிறதா? அல்லது தமிழக அரசு அவசரம் காட்டுகிறதா? மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் ரிட் மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முதலில் விசாரிக்கப்படும். பின்னர், இந்த வழக்கின் முறையிடப்பட்டுள்ள அம்சங்கள் மீது விசாரணை நடைபெறும்.

இந்த விவகாரம் சுமுகமாக தீர்க்கப்படும். கைதிகளை விடுவிக்கும்போது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். ராஜீவ் கொலையாளிகள் 3 பேரை விடுவிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை (இடைக்காலத் தடை) இந்த வழக்கிலும் தமிழக அரசு பின்பற்ற வேண்டும். இந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடரும். மத்திய அரசு ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள மனுவுடன் சேர்த்து, இந்த மனுவும் மார்ச் 6ஆம் தேதி விசாரிக்கப்படும்’ என்று உத்தரவிட்டனர்.

பின்னணி: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது மத்திய அரசு காலதாமதமாக முடிவு எடுத்த காரணத்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த 18ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து, சிறையில் தண்டனை பெற்று வரும் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிப்பதாக தமிழக அமைச்சரவை கடந்த 19ஆம் தேதி கூடி முடிவு எடுத்தது.

தமிழக அரசின் இந்த முடிவு குறித்து 3 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கெடு விதித்து. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

TAGS: