வாஷிங்டன்: நடைபெற உள்ள இந்திய பார்லிமென்ட் தேர்தலில், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலை விட, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு அதிக ஆதரவு உள்ளதாக, அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபாவுக்கான தேர்தல், விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து கட்சிகளும், தொகுதி பங்கீட்டுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. பிரதான கட்சிகள் பிரசாரத்தில் இறங்கிவிட்டன. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள, ‘பியூ’ கருத்துக் கணிப்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின், பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில், 63 சதவீதம் பேர், பா.ஜ., கட்சியை ஆதரிப்பதாகவும், 19 சதவீதம் பேர், காங்கிரசுக்கு ஓட்டளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர், 7 முதல், ஜனவரி, 12 வரை நடத்தப்பட்ட, இந்த ஆய்வில், 10ல், ஆறு பேர், பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளனர்; 10ல் இருவர், காங்கிரசை ஆதரிக்கின்றனர். குஜராத் கலவரம் உள்ளிட்ட புகார்கள் இருந்தாலும், ராகுலை விட, நரேந்திர மோடிக்கு ஆதரவு அதிகம் உள்ளது. இவ்வாறு, ‘பியூ’ நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.