காங்கிரசும் வேண்டாம் காவியும் வேண்டாம்! ஆம் ஆத்மியில் இணைந்த உதயகுமார்

udhauakumar_001கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளார்.

இடிந்தகரையில் நடைபெற்ற விழாவில், ஆம் ஆத்மி நிர்வாகி டேவிட் முன்னிலையில் உதயகுமார் மற்றும் கூடங்குளம் போராட்டக்குழுவின் இதர நிர்வாகிகள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர்.

அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவிலிருந்து தாம் வெளியேறுவதாகவும், தனக்குப்பதிலாக அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராக, போராட்டக்குழுவை சேர்ந்த பெண் ஒருவரை நியமிக்க உள்ளதாகவும், மக்கள் பணியாற்றவே அடுத்தக்கட்டமா தாம் அரசியலுக்கு வருவதாகவும் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னதாக தனது பேஸ்புக் தளத்தில் “இரண்டரை ஆண்டுகளாக எளிய மக்களுக்காகப் போராடி எதையும் சாதிக்க முடியாத நிலையில், யாரும் ஏறெடுத்துப் பார்க்காத கவலையில், அரசியல் தளத்திற்குச் சென்றேனும் ஒரு விடிவை உருவாக்க இயலுமா என்று மக்களும், நாங்களும் சிந்தித்தோம்.

ஒவ்வொரு நகர்வையும், திட்டத்தையும், முடிவையும் போராட்டக் குழுவில், இடிந்தகரை ஊர் நிர்வாகக் குழுவில், பெண்கள் குழுமத்தில், இளைஞர்கள் மத்தியில், ஒட்டுமொத்த சமுதாயக் கூடுகையில் விவரித்து, விவாதித்து, விரிவாகப் பேசித்தான் முடிவெடுத்தோம். முழுக்க முழுக்க திறந்தவெளித்தன்மையுடன், சனநாயகப் பண்புடன், மக்கள் நலத்தை முன்னிறுத்தியே இயங்கினோம்.

எங்களுக்கு ஆதரவாக நின்ற தமிழகக் கட்சிகளை ஒருங்கிணைக்க முயன்றோம். அது முடியாமற் போனவுடன், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான பிரசாந்த் பூஷண் இடிந்தகரை வந்து எங்களை தங்கள் கட்சிக்கு அழைத்தார்.

“காங்கிரசும் வேண்டாம், காவிகளும் வேண்டாம்” என நினைத்த மக்கள், ஆம் ஆத்மி அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தை நடத்துமாறு எங்களைப் பணித்தனர். கடிதம் எழுதினோம், பேசினோம், வாதிட்டோம், கருத்துப் பரிமாற்றங்கள் நடத்தினோம், நேரடிப் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டோம், இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.

இந்தப் பயணம் இனிமையானப் பயணமாக இருக்கவில்லை. “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்பார்களே, அதுதான் நடந்தது. எதிரிகளுக்கு தகவல்கள் சென்றன. அவதூறுகள் பரப்பப்பட்டன. முடிவுகள் எடுக்கும்போதெல்லாம், முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. கூத்தாடிகள் குதித்து குதித்து ஆடினார்கள், ஆடிக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் ஆடுவார்கள்.

“கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்” என்பானே பாரதி. அப்படி பொறுத்திருக்கிறோம். காலம் மாறும். அதுவரை இந்த இரண்டு குறள்களையும், தயவுசெய்து மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

இனி இடிந்தகரைச் சகோதரிகள் ஓர் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைத் தலைமையேற்று நடத்துவார்கள் என்றும் நானும், தோழர் மை.பா. ஜேசுராஜும் இன்னும் சிலரும் நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக மக்கள் பணியைத் தொடரவிருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

TAGS: