இந்தியாவில் நிகழும் மதக்கலவரங்கள் கவலை அளிப்பதாக அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.
2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரம் மற்றும் மாநில முதல்வர் நரேந்திர மோடி மீதான குற்றச்சாட்டுகள் சுமுகமான முறையில் முடிந்து விட்டதாகக் கூறப்படும் தகவல்களை அமெரிக்கா நிராகரித்து விட்டது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, மனித உரிமை நடவடிக்கைகள் தொடர்பான ஆண்டு அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டார்.
அந்த அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா முழுவதும் நிகழ்ந்துள்ள பல்வேறு மதக்கலவரங்கள் கவலை அளிப்பதாக உள்ளது. இந்தியாவின் இதற்கு முந்தைய மனித உரிமைகள் அறிக்கையில் மோடியின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், தற்போதைய அறிக்கையில் அவரது பெயர் குறிப்பிடப்படாதது ஏன்?
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நிகழ்ந்த மதக்கலவரம் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார் ஜென் சாகி.
ஜான் கெர்ரி வெளியிட்டுள்ள அந்த அறிக்கை விவரம்:
குஜராத்தில் 2002-ஆம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நிகழ்ந்த வன்முறையில் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்தக் கலவரத்தின்போது, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விஷயத்திலும், வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்க குஜராத் அரசு தவறி விட்டது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மேற்கண்ட வன்முறை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக குஜராத் அரசு நானாவதி ஆணையத்தை நியமித்துள்ளது. அந்த ஆணையத்தின் விசாரணைக் காலத்தை 21-வது முறையாக 2014 ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து குஜராத் அரசு கடந்த டிசம்பர் மாதம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் பகுதியில் நிகழ்ந்த மதக்கலவரம் பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஜாட் இனப் பெண்ணுக்கு, முஸ்லிம் வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்ததால் வன்முறை வெடித்தது. அப்போது, உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அரசியல் பொதுக் கூட்டத்துக்குச் சென்று விட்டு திரும்புகையில் வன்முறை அதிகரித்தது. இதில், 65 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
42,000 பேர் இடம் பெயர்ந்து விட்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.