இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களது கருணை மனுக்களில் முடிவு வழங்க அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத கால தாமதத்தை ஏற்படுத்திவிட்டதால், அவர்களுடைய மரண தண்டனைகளை ஆயுள் தண்டனைகளாக குறைப்பதாக இந்திய உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்த முடிவை மறுபரிசீலனை செய்யச்சொல்லி மத்திய அரசு சனிக்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், ஜனவரி 21ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய முடிவு “வெளிப்படையாகவே சட்டத்துக்கு முரணாக உள்ளது, அதில் வெளிப்படையான தவறுகள் உள்ளன” என்று வாதிட்டுள்ளது.
வெவ்வேறு குற்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்ட கருணை மனுக்களில் முடிவு வராமல் காத்திருப்போர் சுமார் 15 பேருக்கு அவர்களுடைய மரண தண்டனைகளை ஆயுள் தண்டனைகளாக குறைத்து ஜனவரி 21ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கருணை மனுக்களில் முடிவு தெரிவிக்க அரசாங்கம் பல ஆண்டுகள் தாமதம் செய்துவிட்டதால், அவர்களது மரண தண்டனைகள் குறைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் காரணம் கூறியிருந்தது.
ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கும் அதே அடிப்படையில் தண்டனையைக் குறைக்கச்சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ராஜீவ் கொலையாளிகளது மரண தண்டனைகள் குறைக்கபட்ட தீர்ப்புக்கு எதிராக இந்திய நடுவண் அரசு ஏற்கனவே மறுபரிசீலனை மனு தாக்கல் செய்திருந்தது.
ஆனால் அந்த முடிவுக்கு அடிப்படையான ஜனவரி 21ஆம் தேதி வழங்கப்பட்ட முடிவையும் மறுபரிசீலனை செய்யச்சொல்லி மத்திய அரசு தற்போது மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவில், “அரசியல் சாசனத்தை அர்த்தப்படுத்தும் இவ்விதமான முக்கிய வழக்குகளை குறைந்தது ஐந்து நீதிபதிகளாவது கொண்ட அமர்வுதான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறும் அரசியல் சாசனச் சட்டத்தின் 145ஆம் பிரிவு தற்போது மீறப்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டுள்ளது.
மரண தண்டனை குறைப்பு சம்பந்தமாக உச்சநீதிமன்றம் முன்பு வழங்கிய ஒரு தீர்ப்பில், “தண்டனைக் குறைப்பு பற்றி பரிசீலிக்கும்போது, பொதுவான குற்றமா அல்லது பயங்கரவாதக் குற்றமா என்பதை இனங்கண்டு அதைப் பொறுத்து முடிவு வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் அரசாங்கம் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
மறுபரிசீலனை மனுக்கள் சாதாரணமாக வெளிப்படையாக எல்லோர் முன்னிலையிலும் விசாரிக்கப்படுவதில்லை. அது நீதிபதிகளுடைய அறைகளில் வைத்தே விசாரிக்கப்படுகின்றன.
ஆனால் இந்த மீளாய்வு மனுவை வெளிப்படையாக நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை முன்வைத்துள்ளது. -BBC