ஆந்திராவில் 41 ஆண்டுகளுக்கு பின்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி

anthra_kudiyrasu_001ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் 41 ஆண்டுகளுக்கு பிறகு 2வது முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளத என்பது குறிப்பிடத்தக்கது.

இது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 122வது முறையாக பிறப்பிக்கப்படும் குடியரசு தலைவர் ஆட்சியாகும்.

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து ஹைதராபாதை உள்ளடக்கிய தெலங்கானா மாநிலம் உருவாக்கக் கோரி கடந்த 58 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் மிகவும் தீவிரமானது.

கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர்கள் மாநிலத்தைப் பிரிக்க கூடாது என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

மசோதா நிறைவேற்றம்

இந்நிலையில் கடும் எதிர்ப்புகளையும் மீறி மத்திய அரசு ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதாவை தயாரித்து ஆந்திர சட்டசபைக்கு அனுப்பி வைத்தது.

அந்த மசோதாவை சட்ட சபை நிராகரித்து திருப்பி அனுப்பி விட்டபோதிலும், சில திருத்தங் களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆரம்பம் முதலே மாநில பிரிவினையை எதிர்த்து வந்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகினார்.

அமைச்சரவை பரிந்துரை

இதையடுத்து, புதிய அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வந்தது. சீமாந்திராவுக்கு மத்திய அமைச்சர் சிரஞ்சீவி முதல்வராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகியதால் புதிய அரசு அமைக்கும் முடிவு கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்தது.

இதனையடுத்து ஆந்திர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக இன்று (சனிக்கிழமை) குடியரசுத் தலைவர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

41 ஆண்டுகளுக்கு பின்னர்

கடந்த 1973ம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் ஆந்திர முதல்வராக இருந்தபோது, ‘ஜெய் ஆந்திரா’ போராட்டம் நடைபெற்றது. அப் போது போராட்டத்தை சமாளிக்க முடியாததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தலை தூக்கியது.

இதனைத் தொடர்ந்து, 11-1-1973 முதல் 10-12-1973 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு 41 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது 2-வது முறையாக குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மசோதாவுக்கு ஒப்புதல்

தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளார்.

TAGS: