சென்னையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை உடைப்பு வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு தமிழ் இயக்கங்களும், சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் வேப்பேரி காவல் நிலையம் அருகே, புரசைவாக்கம் டவுட்டன் அருகே, ஓட்டேரி காவலர் குடியிருப்பு அருகே என 3 இடங்களில் இருந்த ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலை சில நாள்களுக்கு முன்பு உடைக்கப்பட்டது. இது குறித்து வேப்பேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
விசாரணையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த எழும்பூர் பகுதிச் செயலர் அய்யனார் (29), ஆயிரம் விளக்கு பகுதி நாம் தமிழர் கட்சி இளைஞரணிச் செயலர் சரவண பிரகாஷ் (30) ஆகிய இருவரும் ராஜீவ்காந்தி சிலையை உடைத்ததாக தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.