இனி மோடியைக் குறித்துப் பேசும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவரை ஆண்மையற்றவர் என்றே குறிப்பிடப் போவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ‘2002’ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது நரேந்திரமோடி அங்கு போனாரா? கலவரத்தை ஏன் தடுக்கவில்லை? கலவரக்காரர்களை தடுக்க முடியாத அவர் ஆண்மை அற்றவர்.
வலிமையானவராக இருந்திருந்தால் நிச்சயம் கலவரத்தை தடுத்து இருப்பார் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
பாஜக பிரதம வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள மோடி குறித்து இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து பா.ஜனதா தலைவர்கள் கூறுகையில், காங்கிரஸ் தலைவர்கள் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு பேசுவதை சோனியாகாந்தி ஏற்றுக் கொள்கிறாரா? இந்த வெட்கக்கேடான வார்த்தையை கூறியதற்காக சல்மான்குர்ஷித் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கோரப் போவதில்லை என சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
மேலும், நரேந்திரமோடியை ‘ஆண்மை அற்றவர்’ என்று நான் கூறியதில் எந்த தவறும் இல்லை. குஜராத் கலவரம் தொடர்பாக அவரை விமர்சிக்க எனக்கு வேறு பொருத்தமான வார்த்தை கிடைக்கவில்லை என விளக்கமளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல்காந்தி, சல்மான் குர்ஷித் கருத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். சல்மான் குர்ஷித் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள இயலாது எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்த போதும், இனி தொடர்ந்து மோடியை தான் அவ்வாறே அழைக்கப் போவதாக சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று உத்திரபிரதேசத்தில் உள்ள தன் சொந்த தொகுதியான பருக்காயத்தில் சல்மான் குர்ஷித் கூறுகையில், நரேந்திர மோடி குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது தன் கடமையை செய்ய தவறி விட்டார். முதல்வர் பதவிக்குரிய நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை. கடமை செய்யாமல் தன் பொறுப்பில் இருந்து தோல்வி அடைந்தவரை ஆண்மையற்றவர் என்றுதான் சொல்வேன். அவரை வேறு எப்படி சொல்ல முடியும்? இன்று மட்டுமல்ல அவர் பற்றி பேசும் போதெல்லாம் நான் இப்படித்தான் சொல்வேன் என கூறியுள்ளார்.
சல்மான் குர்ஷித்தின் இந்த பேச்சுக்கு பாஜக மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.