வாக்கு வங்கியாக பார்க்கிறார்கள்: நரேந்திர மோடி

narendra_modiமுஸ்லிம் மக்களை சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாக்கு வங்கியாக பார்ப்பதாக பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில் மேலும் அவர் கூறியதாவது:

மதச்சார்பின்மை குறித்து பேசி நாட்டு மக்களை சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன. பாஜகவை பொறுத்தவரை மதச்சார்பின்மை என்பது மக்களை ஒற்றுமைப்படுத்துவது மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாகும்.

ஆனால், அந்தக் கட்சிகளோ ஆட்சியைக் கைப்பற்ற மதச்சார்பின்மை என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன. தற்போது தேர்தல் மிக நெருங்கி விட்டது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது.

உத்தரப்பிரதேசத்தை விட குஜராத்தில் முஸ்லிம்களின் பொருளாதார நிலை மிகவும் நன்றாக உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் மனிதர்களாக நடத்தப்படுவதில்லை. அவர்களை வாக்கு வங்கியாக பார்க்கிறார்கள்.

உத்தரப்பிரசேதத்தில் கடந்த ஒராண்டில் 150 கலவரங்கள் நேரிட்டுள்ளன. ஆனால் குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு முறை கூட கலவரமோ அல்லது ஊரடங்கு உத்தரவோ பிறப்பிக்கப்பட்டதில்லை. உத்தரப்பிரதேசத்தில் ஏன் இத்தனை கலவரங்கள் நேரிட்டன என்பது குறித்து முலாயம் சிங் பதில் அளிக்க வேண்டும்.

குஜராத் மாநிலம் குறித்து தவறான தகவல்களை முலாயம் சிங் வெளியிட்டு வருகிறார். முதலில் குஜராத் மாநிலத்திற்கு வந்து, 365 நாட்களும் 24 மணி நேரமும் தடையின்றி மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதை அவர் காண வேண்டும்.

ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரிய அளவில் மின்சாரம் தட்டுப்பாடு நிலவுகிறது. மின்சாரத்தை விநியோகிப்பதில் மக்களிடையே பாகுபாடு காட்டப்படுகிறது.

முலாயம் சிங்கின் தொகுதி மக்களுக்கு மட்டும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. பிற தொகுதி மக்களுக்கு முறையாக மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை. சமாஜவாதி ஆட்சியின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக 20,000 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றார் மோடி.

TAGS: