“ஒப்பந்தத்தை மீறி தமிழக மீனவர்கள் தலைமன்னார் கடலில்…”

sri_lankan-_indian_fishermenஇலங்கை இந்திய மீனவர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான இருநாட்டுப் பேச்சுவார்த்தை உடன்பாட்டை மீறும் வகையில், இலங்கையின் வடக்கே, தலைமன்னார் கடற்பரப்பினுள் இந்திய மீனவர்கள் சனிக்கிழமை இரவு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்ததாக அங்குள்ள மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இது பற்றி தகவல் தெரிவித்த மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவரும், இலங்கை இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக் குழுவில் இடம்பெற்றிருப்பவருமாகிய ஜஸ்டின் சொய்ஸா, தலைமன்னார் மீனவர்கள் சிலர் இது தொடர்பில் தம்மிடம் முறையிட்டிருப்பதாகக் கூறினார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் காணப்பட்டமை தொடர்பில் தலைமன்னார் கடற்படைத் தளத்தின் இரண்டாம் நிலை அதிகாரி தன்னிடம் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“தலைமன்னார் கடற்பரப்பில் இந்தியா பக்கமாக 6 கிலோ மீட்டர் மேற்காக உள்ள கடற்பகுதியில், 85 இந்திய இழுவைப் படகுகள் வந்திருந்ததைத் தானும் நேரில் கண்டதாகவும், அந்தப் படகுகளைத் தமது கடற்படையினர் இந்திய எல்லைக்குச் செல்லுமாறு விரட்டியதாகவும் அந்த அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பாக தமது தலைமையகத்திற்கு அறிக்கையொன்றை அனுப்பிவைத்திருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்” என ஜஸ்டின் சொய்ஸா தெரிவித்தார்.

“இலங்கை இந்திய மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலத்திற்கு இந்திய இழுவைப்படகுகள் தொழிலில் ஈடுபடமாட்டாது என்ற ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுகின்ற ஒரு நடவடிக்கையாக இது இடம்பெற்றிருக்கின்றது. இது குறித்து இன்னும் சில தினங்களில் கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின்போது எமது ஆட்சேபணையை நாங்கள் தெரிவிப்போம்” என்றும் ஜஸ்டின் சொய்ஸா தெரிவித்தார்.

TAGS: