எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படுவது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் திங்கள்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
எச்.ஐ.வி. தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகள் விவகாரத்தில், பள்ளிகள் பாரபட்சமாக நடந்துக்கொள்வதாக குற்றம் கூறியுள்ள நாஸ் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம், இது தொடர்பாக தொடர்ந்த பொதுநல வழக்கு இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சௌஹான் மற்றும் செல்லமேஸ்வர் ஆகியோரை உட்கொண்ட அமர்வு முன்பு நடைபெற்றது.
இந்த பொதுநல மனுவில், எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்படுவதாகவும், சில நேரங்களில் அனுமதி வழங்கப்பட்ட பிறகு பாதியில் அவர்கள் பள்ளியில் தொடர முடியாத சூழ்நிலையை உருவாக்குவதாகவும், அவற்றை தடுப்பதற்கு இந்த விவகாரத்தில் இந்திய உச்சநீதிமன்றம் தலையீட்டு இதற்கான வரைவு முறையை அமல்படுத்த கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கொண்ட உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இந்த விவகாரம் தற்போது மிக அவசியமான ஒன்றாக உருவாகியுள்ளதால்தான் இதற்காக தாம் வழக்கு தொடர்ந்துள்ளதாக நாஸ் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அஞ்சலி கோபாலன் தெரிவித்தார்.
எச்.ஐ.வி. தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகள் என்று வரும்போது அனைவருக்கும் கல்வி என்கிற கொள்கையை பள்ளிகள் பின்பற்றுவது இல்லை என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தனிநபர் தகவல்களை காப்பாற்ற அவை தவறி விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். -BBC