ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது

rajiv-gandhiஇந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழுபேரை விடுதலை செய்யும் விஷயத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு தொடர்பில், தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. மேலும் இது தொடர்பில் தமிழக அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது.

இன்று தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணாவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த பதில் மனுவில், குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 432 இன்படி மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், அதில் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த 7 பேரின் விடுதலை தொடர்பில் மத்திய அரசின் ஆலோசனை பெறுவதற்காக நோட்டீஸ் ஒன்று அனுப்பட்டதாகவும், ஆனால் மத்திய அரசு அதற்கு பதிலளிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளதாகவும், எனவே மத்திய அரசின் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் அந்த பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை விசாரித்து முடிவெடுக்க இந்திய குடியரசுத்தலைவர் எடுத்துக்கொண்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலான கால தாமதத்தை காரணம் காட்டி, அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்சநீதிமன்றம் பெப்ரவரி 18ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருந்தது.

அதனை தொடர்ந்து பெப்ரவரி 19 ஆம் தேதியன்று இந்த மூன்று பேருடன் ஏற்கனவே ஆயுள் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்துவிடுவதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தது. இதற்கிடையில் ராஜீவ் கொல்லப்பட்டபோது அவருடன் கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இந்திய உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்கள்.

இந்த மூன்று மனுக்களையும் ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம் அதன் விசாரணைகள் மார்ச் 6ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது. -BBC

TAGS: