இலங்கை கடற்படை தரும் துயரத்தை கூற இனி வார்த்தைகள் இல்லை!– ஜெயலலிதா

jeyalaitha-jeyaram.gifஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை மற்றும் துயரங்களை கூறுவதற்கு இனி தம்மிடம் வார்த்தைகள் இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையில் இந்த மாதம் கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இதற்கிடையில் நேற்றைதினம் இலங்கை கடற்படையினர் 32 மீனவர்களை கைது செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இலங்கையில் 153 தமிழக மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை உடனடியாக விடுவிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

நேற்றும் 15 தமிழக மீனவர்களை கைது

இலங்கை கடற்படையினரால் நேற்றையதினமும் 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனே.

தலைமன்னார் பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே நேற்று முன்தினம் நெடுந்தீவு பகுதியில் வைத்து 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் யாழில் உண்ணாரவிரதம்

யாழ்ப்பாணம் சிறையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 116 மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திடீர் என உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.

தங்களை விடுதலை செய்ய உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியே அவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி எஸ்.டி.மூர்த்தி யாழ்ப்பாணம் சிறைக்கு நேற்று மதியம் சென்றார்.

அங்கு கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 116 மீனவர்களுடனும் அவர் பேச்சு நடத்தினார். கைதிகளின் மருத்துவ வசதிகள் மற்றும் விடுதலைக்கான முயற்சிகள் குறித்து அவர் உறுதிமொழி வழங்கியமையை அடுத்து மீனவர்கள் அனைவரும் நேற்று பிற்பகலுடன் தமது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் கிரமமாக சிறைக்கு வருகை தந்து கைதிகளாக உள்ள இந்திய மீனவர்களைப் பார்வையிடுவர், அவர்களது நலன்களைக் கவனிப்பர் என்று தூதரகம் சார்பில் மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக அறிய வந்தது.

TAGS: