மேலும் 15 இந்திய மீனவர்கள் கைது: மீனவர்களை விடுவித்தால் மட்டுமே இலங்கையுடன் பேச்சுவார்த்தை! ஜி.கே.வாசன்

GKVasanஇலங்கையின் கடல்பகுதிக்குள் அத்துமீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில், மேலும் 15 இந்திய மீனவர்கள் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் 32 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களின் மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் மன்னாருக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸில் கையளிக்கப்பட்டுள்ளனர்.

ஏதிர்வரும் 13 ஆம் திகதி இரண்டு நாட்டு மீனவர்களுக்கு இடையில் கொழும்பில் பேச்சுக்கள் இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த கைதுகள் இடம்பெறுகின்றன.

மீனவர்களை விடுவித்தால் மட்டுமே இலங்கையுடன் பேச்சுவார்த்தை! ஜி.கே.வாசன்

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவித்தால் மட்டுமே இலங்கையுடன் 2–ம் கட்ட பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று இந்திய மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

காஞ்சீபுரத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,

தமிழக மீனவர்களின் பிரச்சனையை பொறுத்தவரை அது அவர்களுடைய வாழ்வாதாரம் தொடர்புடையது என்பதால் மனிதாபிமான அடிப்படையில்தான் தீர்வுகாண வேண்டும் என்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் பிரதமர் மன்மோகன் சிங் மியன்மார் நாட்டில் சந்தித்து பேசினார்.

ஆனால் இலங்கை அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களையும், படகுகளையும் சிறைபிடித்து வருகிறது. மேலும் இலங்கை அரசு சிறைபிடித்து வைத்துள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவித்தால் மட்டுமே 2–ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடியும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

TAGS: