சரியான முடிவை எடுங்கள்: வாக்காளர்களுக்கு மோடி வலியுறுத்தல்

narendra_modiபொதுத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நாட்டை வளப்படுத்த மக்கள் சரியான முடிவை எடுத்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை காலை மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதன் பின்னர் டுவிட்டர் இணையதளத்தில் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்குமாறு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

“”நாட்டை வளப்படுத்த 272+ என்ற திட்டத்தை நனவாக்கி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாய்ப்பளித்து ஆசிர்வதிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல், ஜனநாயகத்தின் திருவிழா ஆகும். நாட்டின் வளர்ச்சியைக் கருதி குடிமக்கள் வாக்களிக்க வேண்டும்.

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நல்லதொரு வாய்ப்பாகும். எனவே, சரியான முடிவை எடுத்து அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்துக்கு வாழ்த்துகளையும், 10 கோடி புதிய வாக்காளர்களுக்கு வரவேற்பையும் தெரிவிக்கிறேன் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்தியாவில் ஜனநாயகம் வலுப்பெறவும், அந்தப் பாரம்பரியம் நீடிக்கவும் புதிய வாக்காளர்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தகுதியான வாக்காளர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவினை உறுதி செய்து கொள்ள வாய்ப்பளித்த தேர்தல் ஆணையத்துக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

TAGS: