அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசால் மட்டுமே காவிரி நீர் உரிமை முழுமையாக உறுதிப்படுத்தப்படும். விவசாயிகளின் நலன் காக்கப்படும் என்று தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா தெரிவித்தார்.
நாகை அவுரித் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற, நாகை (தனி) மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே. கோபாலுக்கு வாக்கு சேகரிக்கும் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது :
நான் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தேன். இருந்தாலும் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்படும்போதுதான், அந்தத் தீர்ப்புக்கு முழுச் செயல்வடிவம் கிடைக்கும். மத்திய அரசு தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமையும்போது தமிழகத்தின் காவிரி நீர் உரிமை முழுமையாக உறுதிப்படும்.
மீத்தேன் வாயு: தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் ஆய்வு மற்றும் உற்பத்திக்கு மத்திய அரசு 2010-ல் தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்காக 4 ஆண்டுகளுக்கான பெட்ரோல் ஆய்வு உரிமையை 2011-ம் ஆண்டு ஜன. 1-ம் தேதி திமுக அரசு, அந்தத் தனியார் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
மேலும், மீத்தேன் திட்டத்துக்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் வகையில் திமுக அரசு, அந்தத் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தத்ததையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழக நெற்களஞ்சிய மாவட்டங்களில் நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.
இந்தத் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இருப்பினும், மீத்தேன் வாயு எடுக்கும் பணிக்குத் தமிழகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் அனுமதியை வழங்க தமிழக அரசு மறுத்துள்ளது.
மரபணு மாற்றப்பட்ட 200 தானிய வகைகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்தகைய விதைகளை அனுமதித்தால், இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி ஒரு சில தனியார் நிறுவனங்களின் ஏகபோக உரிமையாகும்.
விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும்: மரபணு பயிர் மாற்ற பரிசோதனைகளுக்கு தமிழக அரசு நிச்சயமாக அனுமதி வழங்காது. அதிமுக அரசு மத்தியில் அமையும்போது, விவசாயிகளின் நலன் பாதிக்கும் திட்டங்களை அனுமதிப்பதற்கான உத்தரவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்பது உறுதி. இந்தோனிஷியா மாநாட்டில் இந்திய விவசாயிகளுக்கு எதிரான பல திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளின் நலனுக்கு எதிரான அனைத்து பாதக அம்சங்களையும் மாற்ற அதிமுக நடவடிக்கை எடுக்கும்.
மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு: தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு சுமூகத் தீர்வுக் கிடைக்க 2 நாட்டு மீனவர்களுடனான கடந்த ஜன. 27-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு முன் தமிழக அரசு விடுத்த கோரிக்கையின்பேரில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
2-ம் கட்ட அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை வரும் 13-ம் தேதி இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும் விதமாக கடந்த 3-ம் தேதி புதுக்கோட்டையைச் சேர்ந்த 30 மீனவர்களும், காரைக்காலைச் சேர்ந்த 2 மீனவர்களையும் இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.
இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டிக்க வேண்டிய பிரதமர் இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் கைகுலுக்குகிறார். இவர்போன்ற பிரதமர் நாட்டுக்குத் தேவையா?
இலங்கை இனப்படுகொலைக்கு விசாரணை நடத்தக் கோரி 5 நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழியும்போது, அந்தத் தீர்மானத்தை இந்தியா முன்மொழியவில்லை. மீனவர்கள் பிரச்னைக்கு மூலக்காரணமாக இருப்பது கச்சத்தீவு.
இதை மத்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்தபோது தடுக்கத் தவறியது திமுக அரசு.
கச்சத் தீவை மீட்கவும், மீனவர் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவும் அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமைவதற்கான வாய்ப்பை மக்கள் ஏற்படுத்த வேண்டும் என்றார் ஜெயலலிதா.