ஜெ. பிரதமராவதை ஆதரிப்பேன்: மமதா பானர்ஜி

mamata_jayalalithaதமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமராக தேர்வாகும் சூழல் உருவானால், அவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவு அளிக்கப்படும் என மேற்கு வங்காள முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இந்திய பிரதமராக தேர்வு செய்யும் பட்சத்தில் அதை முழுமனதோடு வரவேற்பேன் என்று வெள்ளியன்று இந்திய தனியார் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் மமதா பானர்ஜி கூறினார்.

“தேவைப்பட்டால் அவருக்கு ஆதரவு அளிப்பதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும் கிடையாது”

அதேசமயம், எந்தவித சூழலிலும் காங்கிரஸ் அல்லது பாஜக போன்ற கட்சிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்காது என்றும், இந்திய பிரதமராக நரேந்திர மோடி உருவாக ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டேன் என்றும் மமதா பானர்ஜி அப்போது குறிப்பிட்டார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்கனவே இணைந்து பணியாற்றிய காலங்களை மம தா பானர்ஜி நினைவுகூர்ந்தார்.

இந்தியாவில் பலம் மிக்க அரசியல் பெண்மணிகளான தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோருடன் தான் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என்பது போன்ற ஊகங்கள் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டுவருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஜெ. நன்றி

ஜெயலலிதா பிரதமராக மமதா பானர்ஜி தெரிவித்துள்ள இந்த ஆதரவுக்கு, வெள்ளிக்கிழமை காலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரடியாக நன்றி தெரிவித்ததாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உயர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. -BBC

TAGS: