மோடியை திடீரென சந்திக்க முயற்சி: கேஜரிவாலுக்கு மறுப்பு

arvindகுஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி திடீரென கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் குஜராத்தை விட்டு அவர் வெளியேறினார்.

குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளதா? என ஆய்வு செய்யும் சாலையோரப் பிரசார நிகழ்ச்சியை கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் கடந்த இரு நாட்களாக மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், முதல்வர் நரேந்திர மோடியை சந்திக்க விரும்புவதாக கூறி நேரம் ஒதுக்கித் தருமாறு காந்திநகரில் உள்ள முதல்வரின் அலுவலகத்துக்கு கேஜரிவால் வெள்ளிக்கிழமை திடீரென வர முயன்றார். ஆனால், அவரை முதல்வரின் அலுவலகத்துக்கு 5 கி.மீ.க்கு முன்னதாகவே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் சிசோடியா மட்டும் முதல்வரின் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மோடியை கேஜரிவால் சந்திக்க நேரம் ஒதுக்கும்படி மோடியின் செயலரிடம் சிசோடியா வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு, மோடியின் முடிவைக் கேட்டு தகவல் தெரிவிப்பதாக செயலர் தெரிவித்தார் என்றும், பின்னர் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் டுவீட்டர் இணையதளப் பதிவில் சிசோடியா குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து காந்திநகர் காவல்துறை கண்காணிப்பாளர் சரத் சிங்கால் கூறுகையில், “”கேஜரிவாலின் காரை போலீஸார் நிறுத்தவில்லை. அவர்களாகவே காரை நிறுத்திவிட்டனர். சிசோடியாவை முதல்வர் மோடியின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றேன். அவரது கோரிக்கையை எழுத்துப் பூர்வமாக அளிக்கும்படி அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதையடுத்து, இரண்டு அல்லது மூன்று நாள்களில் பதில் தெரிவிப்பதாக முதல்வர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்” என்றார்.

இதனிடையே, விமான நிலையத்துக்கு சென்ற கேஜரிவால் அங்கிருந்து ஜெய்ப்பூர் சென்றார். முன்னதாக, நரேந்திர மோடி தனக்கு நேரம் ஒதுக்கித் தராதது அவர் சாமானிய மக்களை விரும்பவில்லை என்பதைக் காட்டுவதாகவும், கூட்டத்தில் மக்களிடம் பேசுவதற்காக பதில்களை மோடி பேசுவதைத் தவிர எந்தக் கேள்விகளுக்கும் அவர் பதிலளிப்பதில்லை என்றும் புகார் தெரிவித்தார்.

குஜராத்தின் வளர்ச்சிகள் குறித்து 16 கேள்விகளை எழுப்பியுள்ள கேஜரிவால். அனைத்து விவகாரங்கள் குறித்தும் மோடியிடம் விவாதிக்க விரும்பியதாகக் கூறினார்.

வேலைவாய்ப்பின்மை அதிகம்: குஜராத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக கூறிய கேஜரிவால், “”அண்மையில் 1,500 அரசு காலிப்பணியிடங்களுக்காக 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததே அதற்கு ஆதாரம். படித்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தாற்காலிக வேலைக்கு ரூ.5,300 ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்த ஊதியம் ஒரு மாதத்தில் குடும்பத்தை நடத்த போதுமா? மாநிலத்தில் அரசுப் பள்ளிகளின் நிலை மோசமாக உள்ளது. அரசால் நில ஆர்ஜிதம் செய்யப்படும்போது விவசாயிகளுக்கு குறைந்த அளவே இழப்பீடு வழங்கப்படுகிறது. மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மோடி பொய் சொல்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.

TAGS: