பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ளது; மோடி அலை ஏதும் இல்லை

akliesh_yadav“உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஆனால் மோடி அலை ஏதும் வீசவில்லை’ என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து தில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

குஜராத்தில் இருந்து உத்தரப்பிரதேச உயிரியல் பூங்காவுக்கு சில சிங்கங்கள் வழங்கப்பட்டன. இதை வைத்துக்கொண்டு, உத்தரப்பிரதேசத்துக்கு சிங்கங்களே குஜராத்தில் இருந்துதான் வழங்கப்படுகின்றன என மோடி மார் தட்டிக் கொள்கிறார். இது சரியல்ல. பரந்த மனதுடையவரே நாட்டின் பிரதமராக முடியும்.

“கடந்த 2 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தக் கலவரமும் நடைபெறவில்லை’ என்று மோடி கூறி வருகிறார். முதன் முதலாக மதக்கலவரங்களை குஜராத் அரசுதான் தொடங்கியது. அந்த மாநிலத்தின் முதல்வரான நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசத்தில் நிலவும் கலவரங்களை தடுக்கப்போகிறாராம்.

பாஜகவுடன் ஒப்பிடுகையில் சமாஜவாதி கட்சியின் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. எனினும், பாஜகவின் பொதுக்கூட்டங்களை பெரிதாகக் காட்ட அக்கட்சியினர் தந்திரங்களில் ஈடுபடுகின்றனர். பாஜகவின் கூட்டங்களில் மக்கள் கூட்டம் சற்று அதிகமாகி இருப்பது உண்மைதான். அதற்காக தேர்தல் முடிவுகள் அவர்களுக்குத்தான் சாதகமாகும் என்று கூற முடியாது.

உத்தரப்பிரதேசத்தில் மோடிக்கு ஆதரவாக எந்த அலையும் வீசவில்லை என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

கேஜரிவால், மாயாவதி மீது தாக்கு:

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் குறித்து அவர் கூறுகையில், “அண்மையில் அரவிந்த் கேஜரிவால், கான்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார். எனினும், மாநிலத்தில் அக்கட்சியின் தாக்கம் பெரிய அளவில் இல்லை’ என்றார்.

அதேபோல் மாயாவதி குறித்து அவர் கூறுகையில், “சுய விளம்பரத்திற்காக மக்கள் பணத்தை பெருமளவில் வீணாக்கியவர். அம்பேத்கரை விட தாம் பெரிய தலைவர் என்ற உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், அவரது சிலைகள் பெரிய அளவில் நிறுவப்பட்டுள்ளன’ என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

TAGS: