குஜராத் மாநிலம் ஆமதாபாதில் “ஆம் ஆத்மி’ கட்சி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கலந்து கொண்ட கூட்டத்தில் கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சௌக் என்னுமிடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சுமார் 50 பேர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். அவர்களை குஜராத் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்க மேடைக்கு வரும்படி கேஜரிவால் அழைத்தார். ஆனால் அவர்கள் வர மறுத்ததுடன், மேடையை நோக்கி கற்களை வீசி விட்டு தப்பியோடி விட்டனர்.
இதனிடையே கூட்டத்தில் கேஜரிவால் பேசுகையில், “குஜராத்தில் விவசாய வளர்ச்சி 11 சதவீதம் இருப்பதாக மோடி தெரிவித்து வருகிறார். ஆனால் மாநில அரசு இணையதளத்திலோ அதற்கு எதிர்மாறான தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தில்லி முன்னாள் முதல்வரான எனக்கே பாதுகாப்பு அளிக்க மோடியால் முடியவில்லை. அவரால் எப்படி 6 கோடி குஜராத் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்?’ என்றார்.