குஜராத்தை விட மேற்கு வங்கத்தில் அதிக வளர்ச்சி

  • mamthaகுஜராத்தை விட மேற்கு வங்க மாநிலம் அதிக வளர்ச்சி பெற்றிருப்பதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் பி.டி.ஐ. செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், அவர் மேலும் கூறியிருப்பதாவது:

குஜராத் மாநிலத்தில் நக்சல் பிரச்னை இருந்ததா? ஆனால் மேற்குவங்க மாநிலத்தில் இருந்த நக்சல் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு அமைதி நிலவுகிறது. குஜராத்தில் டார்ஜிலிங் போன்ற பிரச்னை இருந்ததா? ஆனால் மேற்கு வங்கத்தில் இருந்தது. நான் மேற்கொண்ட நடவடிக்கையால், டார்ஜிலிங் பகுதி மக்களின் முகத்தில் புன்னகை தவழ்கிறது.

அதுபோல், குஜராத் மாநிலத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு கடன் பிரச்னை இருந்ததா? ஆனால் இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் மேற்குவங்கத்துக்கு இருந்தன. அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு, மேற்குவங்க மாநிலம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.

குஜராத் மாநிலம் அதிக வளர்ச்சி கண்டிருப்பதாக கூறுகின்றனர். இதுவரை எந்தப் பிரச்னையையும் சந்திக்காமல் குஜராத் மாநிலம் வளர்ச்சி கண்டிருக்கிறது.

ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில், மாநிலம் சுரண்டப்பட்டது.

இதனால் அடிமட்டத்தில் இருந்து மேல்நிலை வரை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டியிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 34 ஆண்டுகளில் செய்த பணிகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சி 34 மாதங்களில் செய்தது.

மேற்குவங்கத்தில் திரிணமூல் ஆட்சிக்காலத்தில் எந்த வரியின் அளவும் ஒரு சதவீதம் கூட அதிகரிக்கப்படவில்லை. ஆனால் வரியின் மூலம் கிடைக்கும் வருவாய் தற்போது 2 மடங்கு அதிகரித்துள்ளது என்று மம்தா பானர்ஜி கூறினார்.

TAGS: