“இடிந்தகரையிலிருந்து விரைவில் வெளியே வருவோம்”

aap1ஆம் ஆத்மி கட்சி சார்பில் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இடிந்தகரையில் இருந்தவாறே காணொலிக் காட்சி மூலம் உதயகுமார் பேசினார். இடிந்தகரையில் இருந்து விரைவில் வெளியே வருவோம் என அவர் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சி சார்பில், மக்களவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக உதயகுமார் பங்கேற்பார் என கட்சி நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.

ஆனால், உதயகுமார் இடிந்தகரையைவிட்டு வெளியேறினால் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுவதால், அவர் அங்கிருந்தவாறே காணொலிக் காட்சி மூலம் பேசினார்.அவர் கூறியதாவது: இடிந்தகரை போராட்டம்குறித்து இடதுசாரிகள் உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை. ஆகவேதான் இடிந்தகரை போராட்டக் குழு அரசியல் இயக்கத்தில் இணைந்துள்ளது.

இந்தச் சூழலில் அணுஉலைகுறித்து மட்டும் பேச முடியாது. நாட்டின் வளர்ச்சி, நீடித்த நிலையான வளர்ச்சி தேவை என்பதைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டிய நேரம் இது. தாமிரவருணி நதியின் நிலத்தடி நீர் அருகி வருவது குறித்து அரசியல் கட்சிகள் கவலை கொள்ளவில்லை. வெகு விரைவில் நாங்கள் வெளியே வருவோம். கைது செய்தாலும் பரவாயில்லை.

கைது செய்யவில்லையெனில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவோம். சாதி, மதம், கருத்து வேறுபாடுகள் கடந்து நாடு வளம் பெற புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.

மை.பா.ஜேசுராஜும் காணொலிக் காட்சி மூலம் பேசினார்.

இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி. பாலா தலைமை வகித்தார்.

தேர்தல் பணிக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜி. ஜோசப் சகாயராஜ், தேர்தல் பணிக் குழு உதவி ஒருங்கிணைப்பாளர் சி.எம். ராகவன், லட்சுமிகாந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.

TAGS: