இந்திய உச்சநீதிமன்றம்
இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளை ஒரு வருடத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது.
எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. போன்றோர், பதவி மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்தி அவர்கள் மீதுள்ள வழக்கை இழுத்தடிப்பதன் மூலம், தண்டனை பெறுவதில் இருந்து தப்பித்துக் கொள்வதாக தொடர்ப்பட்ட பொது நலன் வழக்கு ஒன்றில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோத்தா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்ற இந்த விசாரணையின்போது, இது தொடர்பாக சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை கோரப்பட்டிருந்தது.
வெளியாகியுள்ள இந்த தீர்ப்பில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குள் கீழ் நீதிமன்றங்களில் தீர்ப்பளிக்காவிட்டால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அனைத்து நீதிமன்றங்களும் இது போன்ற வழக்குகளில் தினந்தோறும் விசாரணையை நடத்தி விரைவாக வழக்கினை முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுடில்லியில் இருந்து இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட இந்த பொது நல மனுவில், நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்படும் நீதி விசாரணை காலம் கடத்தப்படுவதால் சரியான சமயத்தில் நீதி கிடைப்பதில்லை என்றும், சட்டப்படியான நடவடிக்கையில் இருந்து குற்றவாளிகள் தப்பிச் சென்று விடுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மேலும் பதவி வகிப்பவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன், அவர்களை தகுதி நீக்கம் செய்து அவர்களது பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் கோரிக்கைகளில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து கருத்து கூறிய சட்ட வல்லுனர்கள் சிலர், பதவியில் உள்ளோர் மீது நடைபெறும் கிரிமினல் வழக்குகள் தொடர்பில் ஏற்கனவே பெரும்பாலும் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், ஒரு சில வழக்குகளில் மட்டும் சிக்கல் நீடிப்பதாகவும் கூறினார்கள்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை 2003-ல் தொடங்கி இன்று வரை பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய சட்ட வல்லுனர் ஒருவர், இதன் மூலம் இது தொடர்பில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து கேள்வி எழுப்பினார். -BBC
திருட்டுக் கூட்டமே MLA, MP ஆக வந்து சட்டம் இயற்றுவதால் வரும் வினை இது. எங்க நாட்டிலும் இதே நிலைதான்.