செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்ததைப்போல் பேசுகிறார் ராகுல்: மோடி தாக்கு

  • பிகார் மாநிலம் பூர்ணியாவில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக் கூட்டத்தில் தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக முழக்கமிடும் மோடி.
  • பிகார் மாநிலம் பூர்ணியாவில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக் கூட்டத்தில் தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக முழக்கமிடும் மோடி.

 

காங்கிரஸ் கட்சியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் செயல்பாடுகளை நினைவில் கொள்ளாமல், செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்ததைப்போல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசி வருகிறார் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி விமர்சித்தார்.

பிகார் மாநிலம் பூர்ணியாவில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நரேந்திர மோடி, ராகுல் காந்தியை இளவரசர் என்று குறிப்பிட்டவாறு உரையாற்றினார். மோடி மேலும் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஊழல், வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, வளர்ச்சியின்மை ஆகியவை அதிகரித்துள்ளன.

இதுகுறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு ராகுல் காந்தி மௌனம் சாதித்து வருகிறார். ஆனால், செய்வாய்க் கிரகத்தில் இருந்து வந்ததைப்போல் ராகுல் காந்தி பிறரை குற்றம் சாட்டியும், பிறருக்கு அறிவுரை வழங்கியும் வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மத்தியில் நடைபெற்றதா? இல்லையா? என்பதை முதலில் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும்.

பள்ளிகள் கணினிமயம்: காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் அஸ்ஸாமில் 7 சதவீதப் பள்ளிகளும், ஹரியாணாவில் 40 சதவீதப் பள்ளிகளும், மகாராஷ்டிரத்தில் 22 சதவீதப் பள்ளிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

ஆனால் காங்கிரஸ் கட்சியால்தினந்தோறும் குற்றம் சாட்டப்படும் குஜராத் மாநிலத்தில் 71 சதவீத பள்ளிகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

அறிவுஜீவியைப் போல் தன்னை நினைத்து கொள்ளும் மத்திய அமைச்சர் கபில் சிபல், மாணவர்களுக்கு குறைந்த விலையில் “ஆகாஷ்’ கையடக்கக் கணினி (டேப்லட்) வழங்கப்படும் என்று கூறி வந்தார்.

அந்தத் திட்டம் என்ன ஆயிற்று? அதற்கு ஒதுக்கப்பட்ட பணம் எங்கு சென்றது?

நிதீஷுக்கு கண்டனம்: பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தால் வேறு எந்தக் காரணமுமின்றி பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகினார். பிரதமராகும் கனவு அவரை தூங்க விடுவதில்லை. “பிரதமர் பதவிக்கு தன்னை விட பொருத்தமான வேட்பாளர் யாரும் இல்லை’ என்று நிதீஷ்குமார் கூறியிருப்பது, அவரது அகம்பாவத்தை மட்டுமே காண்பிக்கிறது. அது எவரஸ்ட் சிகரத்தை விட பெரிதாக உள்ளது.

3-வது அணி மீது தாக்கு: முன்னாள் பிரதமர்கள் மற்றும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படும் பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் குழுவாகத்தான் மூன்றாவது அணி உள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் போதெல்லாம் இவர்கள் உறக்கத்தில் இருந்து எழுவார்கள். பின்னர் மீண்டும் உறங்க சென்றுவிடுவார்கள் என்றார் மோடி.

“காங்கிரஸ் – ஆர்ஜேடி : ஊழல் கூட்டணி”

“நாட்டில் மூன்று விதமான கூட்டணிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் கட்சிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கும் (ஆர்ஜேடி) இடையே ஏற்பட்டுள்ள ஊழல் கூட்டணியும் ஒன்று’ என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

பூர்ணியா பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, “நாட்டில் உள்ள 3 விதமான கூட்டணிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான கூட்டணியாகும். கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான ஊழவாதிகள் அடங்கிய கூட்டணியும், வன்முறையில் ஈடுபடுபவர்களின் கூட்டணியும் மற்ற இரு கூட்டணிகளாகும். காங்கிரஸ் -ஆர்ஜேடி இடையேயான ஊழல் கூட்டணியைக் கண்டு கால்நடைகள் தங்கள் உணவு பறிபோய்விடுமோ என்று அஞ்சுகின்றன’ என்றார் மோடி.

TAGS: