மோடி பிரதமரானால் சிறிலங்கா குறித்த இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் வரும் – ஜஸ்வந்த் சின்ஹா

JASWANT-300x173இந்திய மத்திய அரசின் பலவீனத்தினால் தான், இந்தியாவை சிறிலங்கா ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்றும், நரேந்திர மோடி பிரதமரானதும் இந்தநிலை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று இந்தியாவின் முன்னாள் வெளிவகார அமைச்சரும், பாஜக மூத்த தலவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில், நேற்றுமாலை மதிமுக சார்பில் நடத்தப்பட்ட மனிதஉரிமைகள் கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“இந்திய அரசியலமைப்பில், மனிதஉரிமைகள் அடிப்படை உரிமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, திபெத்தில் சீனா நடத்திய மனிதஉரிமை மீறல்கள் முதல் சிறிலங்காவில் இன்றுவரை நடந்து வரும் மனிதஉரிமைமீறல்கள் வரை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் இயலாமைதான் காரணம்.

சிறிலங்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் இந்தியாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

அண்மையில் மியான்மரின் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்த போது, வடக்கு,கிழக்கில் படைக்குறைப்பு, மீனவர்கள் விகாரம் உள்ளிட்ட எதிலுமே சிறிலங்கா உறுதியான வாக்குறுதியை கொடுக்கவில்லை.

சிறிலங்காவுக்கு எதிராக, புதுடெல்லி கடும் நிலைப்பாட்டை எடுத்தால், இந்தியாவின் மூலாபாய இடமான சிறிலங்காவை சீனா கைப்பற்றிக் கொள்ளும் என்ற கருத்து சரியானதல்ல.

அமெரிக்கா தென்துருவத்தில் மொன்றோ கோட்பாட்டை வைத்திருக்க முடியுமென்றால், தெற்காசியாவில் எம்மாலும் வைத்துக் கொள்ளமுடியும்.

சிறிலங்காவில் சீனா நிலைகொள்ளும் என்ற பயத்துடன் இந்தியா வாழ முடியாது.

அனுமான் போன்று, நாம் எமது வலிமையை உணர்ந்து கொள்ள வேண்டும்

எம்மால், பாக்கு நீரிணையை தாண்ட முடியும். துப்பாக்கிகளுடன் அல்ல ரோஜாக்களுடன்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணுகுண்டு சோதனை நிகழ்த்தியதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் மீது பொருளாதாரத் தடை விதித்தன.

அந்தத் தடையை நீக்க வாஜ்பாய் யாரிடமும் கெஞ்சவில்லை.

மாறாக, அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனை இந்தியாவுக்கு வரவழைத்தார்.

கார்கில் போரின்போது பாகிஸ்தானுடன் சமாதானம் பேச அமெரிக்கா அழைத்தபோது அவர் அங்கு செல்லவில்லை. அந்த போரில் நாம் வெற்றி பெற்றோம்.

ஆனால் இன்று, ஈழத்தமிழர் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு நொண்டி வாத்து போல் செயற்படுகிறார்.

அதனால்தான் இந்தியாவின் பேச்சை சிறிலங்கா மதிப்பதில்லை.

இந்த நிலை மாறி அனைத்துலக அளவில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்க, மோடி பிரதமராக வர வேண்டும்.

மோடி பிரதமரானதும், இந்திய அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறைகளுமே மாற்றமடையும்.

அதற்கு, தமிழ்நாட்டு மக்கள், சிறிலங்கா நிகழ்ந்த இனப்படுகொலையில் ராஜபக்சவுக்கு துணை நின்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கும், அந்த கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிக்கும் தேர்தலில் வாக்களிக்கக் கூடாது.

மாறாக, இந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்தால் அது இலங்கையில் நடந்த இனப்படுக்கொலைக்கு இணையானது” என்றும் தெரிவித்தார்.

TAGS: