சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் 16 பேர் பலி

  • நக்ஸல்கள் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் ஒருவரை சிகிச்சைக்காக வாகனத்தில் கொண்டு செல்லும் சிஆர்பிஎஃப் படையினர்.
  • நக்ஸல்கள் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் ஒருவரை சிகிச்சைக்காக வாகனத்தில் கொண்டு செல்லும் சிஆர்பிஎஃப் படையினர்.
  • நக்ஸல்கள் தீவைத்ததில் உருக்குலைந்த வாகனங்கள்.
    நக்ஸல்கள் தீவைத்ததில் உருக்குலைந்த வாகனங்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீர் தாக்குதலில் 11 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து வனப் பகுதிக்குள் தப்பியோடி விட்ட நக்ஸலைட்டுகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள ஜீரம் நுல்லா வனப் பகுதியில் சிஆர்பிஎஃப் படையினர் 30 பேரும், மாநில போலீஸார் 14 பேரும் புதிதாக சாலை அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை சுமார் 200 நக்ஸலைட்டுகள் திடீரென சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளை வெடிக்க செய்ததுடன், பாதுகாப்பு படையினரையும் துப்பாக்கிகளால் சுட்டனர்.

இந்தத் தாக்குதலில் 11 சிஆர்பிஎஃப் படை வீரர்கள், 4 போலீஸார் உள்பட 16 பேர் பலியாகினர். அவர்களில் சிஆர்பிஎஃப் படைக்கு தலைமை தாங்கி வழிநடத்திய இன்ஸ்பெக்டர் சுபாஷ் என்பவரும் ஒருவராவார். மேலும் 3 பேர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தனர்.

பின்னர் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் படையினர் மற்றும் போஸீஸாரின் உடல்கள் அருகே கிடந்த துப்பாக்கிகளை நக்ஸலைட்டுகள் கொள்ளையடித்துக் கொண்டு வனப்பகுதிக்குள் தப்பியோடி விட்டனர். தப்பியோடும்போது அப்பகுதியில் இருந்த 3 வாகனங்களை நக்ஸலைட்டுகள் தீவைத்து எரித்து விட்டனர்.

நக்ஸலைட்டுகள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதா? அல்லது யாரேனும் காயமடைந்தனரா ?என்பது குறித்து தகவல் இல்லை.

கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தண்டேவாடா பகுதியில் நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 76 பேர் பலியாகினர். 2013ஆம் ஆண்டு மே மாதம் பஸ்தர் பகுதியில் நக்ஸலைட்டுகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி. சுக்லா மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து நக்ஸலைட்டுகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலை நக்ஸலைட்டுகள் இயக்கத்தை சேர்ந்த ராமண்ணா, சுரீந்தர் மற்றும் தேவா ஆகிய 3 பேர் தலைமை தாங்கி நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மாதம் 17ஆம் தேதி நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களுக்கு, புலனாய்வுப் படை எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியிருப்பது சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேடும் பணி தீவிரம்: தாக்குதல் நடத்திவிட்டு வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்ட நக்ஸலைட்டுகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சிஆர்பிஎஃப் படையினர் மற்றும் போலீஸார் ஏராளமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜெகதால்பூர் மற்றும் ராய்ப்பூரில் இருந்து 2 விமானப்படை விமானங்களும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் நடைபெற்ற பகுதியை பார்வையிடுவதற்காக சிஆர்பிஎஃப் டிஜிபி திலீப் திரிவேதி மற்றும் ஐஜி ஜுல்பிகர் ஹாசன் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் நக்ஸல்கள் ஆதிக்கமுள்ள சோனேபத்ரா, சாந்தௌலி, மிர்ஜாபூர் ஆகிய 3 மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

பிரணாப் வலியுறுத்தல்: இந்நிலையில் நக்ஸல்கள் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சேகர் தத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், நக்ஸல்கள் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர், போலீஸார் பலியானது குறித்த செய்தியை கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்ததாகவும், பாதுகாப்புப் படையினர் மீது இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, நக்ஸலைட்டுகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றும், அந்த இயக்கம் தயக்கமின்றி ஒடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கூறுகையில், “இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது’ என்றார்.

ராகுல் கண்டனம்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “இந்தத் தாக்குதல் முட்டாள்தனமானது. தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தை பாஜக கண்டிக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக நக்ஸலைட்டுகள் தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலின்போது இதேபோல் நக்ஸலைட்டுகள் தாக்குதலை நடத்தினர். ஆனால் அவர்களின் திட்டம் அப்போது தோல்வியடைந்தது. அதுபோல் மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தற்போதும் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த முறை போன்று இம்முறையும் அவர்கள் தோல்வியடைவர்’ என்றார்.

மாநில அரசே பொறுப்பு- காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்,” தேர்தலுக்கு முன்னதாக தாக்குதல் நடத்துவதை நக்ஸல்கள் வழக்கமாக கொண்டுள்ளதாக பாஜக தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தவிர்க்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்’ என்றார்.

TAGS: