116 இந்திய மீனவர்கள் விடுதலை : நாளை பேச்சுவார்த்தை நடக்காது

indian_fishermenஇலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடித்தமைக்காகக் கைது செய்யப்பட்டு யாழ்ப்யாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் 116 இந்திய மீனவர்கள் புதனன்று விடுதலை செய்யப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட நீரியல் கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இந்த வருடத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதுவரையில் மொத்தமாக 148 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் 116 பேரை சட்ட மா அதிபரினது உத்தரவுக்கமைவாக, நீரியல் கடற்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கடித அறிவித்தலையடுத்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

விடுதலை செய்யப்பட்டவர்களின் 26 படகுகளும் நீதிமன்றத்தினால் அவர்களிடம் கையளிப்பதற்காக விடுவிக்கப்பட்டிருக்கின்றன.

விடுதலை செய்யப்பட்டவர்கள் போக, இன்னும் 32 இந்திய மீனவர்கள் யாழ் சிறைச்சாலையில் இருக்கின்றார்கள். இவர்களும் எந்தவேளையிலும் சட்ட மா அதிபரின் உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களுடைய பாதுகாப்பில் யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இவர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டு, இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய மீனவ பிரதிநிதிகளுக்கிடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நாளை வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்திய மீனவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களையும், நீர்கொழும்பையும் சேர்ந்த மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வடமாகாண மாவட்டங்களில் உள்ள நான்கு கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களுமாக 17 பேர் இலங்கையின் தரப்பில் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

இதேவேளை இந்திய மீனவர் பிரதிநிதிகள் 17 பேரும் அதிகாரிகள் 10 பேருமாக மொத்தம் 27 பேர் இந்தியத் தரப்பில் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார்.

எனினும், முதல் கட்டப் பேச்சுக்களின்படி, ஒரு மாத காலத்திற்கு இலங்கைக் கடற்பரப்பினுள் வருவதில்லை என்ற உடன்பாட்டை இந்திய மீனவர்கள் மீறியதனால் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று இலங்கை மீனவ பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை பேச்சுவார்த்தை கிடையாது

இலங்கை இந்திய மீனவ பிரதிநிதிகளுக்கிடையில் நாளை வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற மாட்டாது என்று இலங்கைக் கடற்தொழில் அமைச்சின் ஊடகச் செயலாளர் நரேந்திர ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்துள்ளர்.

இந்தியத் தரப்பினர் நாளைய பேச்சுக்களில் கலந்து கொள்ள முடியாதிருப்பதாகத் தெரிவித்து, வேறு ஒரு திகதியைக் கோரியிருப்பதாகவும் அவர் கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் தமிழகப் பிரதிநிதிகள் பேச்சுக்களில் கலந்து கொள்ளமாட்டார்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்திருந்த எச்சரிக்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனச் சுட்டிக்காட்டிய நரேந்திர ராஜபக்ஷ, இன்று புதன்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 25 இலங்கை மீனவர்களும் அவர்களுடைய 5 படகுகளும் அங்குள்ள நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தங்களுக்கு இந்தியத் தூதரகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அதிகாரபூர்வமாகக் கடிதம் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதுதவிர, நேற்றிரவு தமிழ் நாட்டு கடற்படையினரால் 5 இலங்கை மீனவர்களும் ஒரு படகும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் நரேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார். -BBC

TAGS: