தூக்கு தண்டனை குறைப்பு: மத்திய அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

supremவீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உள்பட 15 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவகீர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றத்தில் அல்லாமல், நீதிபதிகளின் அறையில்  பரிசீலனை செய்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

“மத்திய அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனு கவனமாக பரிசீலிக்கப்பட்டது. கருணை மனு தொடர்பான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் விசாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மனுவில் தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கு மனுவில் கூறப்பட்டிருக்கும் காரணங்கள் தகுதி வாய்ந்ததாக இல்லை. ஆகையால் இந்த மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கூறினர்.

முன்னதாக, இந்த மனு மீது நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற மத்திய அரசு தெரிவித்திருந்த கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

மறுஆய்வு மனுவின் விவரம்: மத்திய அரசு இம்மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனுவில், “கடந்த ஜனவரி 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கும் வழிவகுத்துள்ளது. கருணை மனு தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், “தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு முன்பு குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

தடா சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கும், பிற குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. ஆகையால், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க கடந்த ஜனவரி 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சட்டப்படி சில குறைபாடுகள் உள்ளதால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்’ என்று மத்திய அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னணி: கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்க காலதாமதமானதால் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சந்தன மரக்கடத்தல்காரர் வீரப்பனின் கூட்டாளிகள் பிலவேந்திரன், சைமன், மாதையன், ஞானப்பிரகாசம் உள்பட 15 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான அமர்வு, “கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க மிகவும் காலதாமதமானதால் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் பாதிப்படைந்துள்ளனர். ஆகையால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம்’ என்று கடந்த ஜனவரி 21ஆம் தேதி தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டி ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களின் தூக்கு தண்டனையையும் குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இதையடுத்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக மத்திய அரசு 3 நாள்களில் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கெடு விதித்தது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரையும், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ராஜீவ் கொலையாளிகளின் விடுதலைக்கு காரணமாக இருந்த கடந்த ஜனவரி 21ஆம் தேதிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தனியாக மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவைத்தான் உச்ச நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.

TAGS: