டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனையை டில்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட இந்த மரண தண்டனையை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டில் இன்று வியாழக்கிழமை டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரேவா கேத்தரபால் மற்றும் பிரதிபா ராணி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முகேஷ், அக்ஷய் தாக்கூர், பவன் குப்தா, வினய் ஷர்மா ஆகியோர் சார்பில் தொடுக்கப்பட்ட மேல்முறையீடு மனு மீதான விசாரணை நடைபெற்று முடிந்து, இன்று வழங்கப்பட தீர்ப்பில் மீண்டும் அவர்களுக்கு மரணதண்டனை உறுதியாகியுள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பில் அவர்கள் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசமும் வழங்கியுள்ளது.
இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்தும், இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என இந்த நால்வர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்தார்.
மேலும் அவர் இது குறித்து தெரிவித்த போது உயர்நீதிமன்றம் திடீரென்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், இந்த நால்வருக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
டில்லியில் கடந்த 2012ம் வருடம் டிசம்பர் மாதத்தில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் தெற்கு தில்லி விரைவு நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து, தண்டிக்கப்பட்ட இந்த நால்வர் சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. -BBC